2009-01-26 11:03:01

மனமாற்றம் ஐக்கியத்திற்கு இட்டுச்செல்லும் என்கிறார் திருத்தந்தை.


26ஜன.2009. கிறிஸ்தவர்கள், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கி மனம்மாறத் தொடர்ந்து தங்களை அனுமதித்தால் முழு கிறிஸ்தவ ஒன்றிப்பை அடையும் நாள் வரும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட புனித பவுல் மனமாறிய விழாவையொட்டிய சிந்தனைகளை மூவேளை செப உரையில் பகிர்ந்து கொண்ட அவர், புனித பவுலின் மனமாற்றம் அவர் உயிர்த்த கிறிஸ்துவை சந்தித்ததில் முதிர்ச்சியடைந்தது, அதுவே அவரது வாழ்வை அதிரடியாக மாற்றியது என்றார்.

பவுல் நற்செய்தியை நம்பியதால் மனம்மாறினார் என்றுரைத்த திருத்தந்தை, பவுலது மற்றும் நமது மனமாற்றம், இறந்து உயிர்த்த இயேசுவை நம்புவதிலும், சுடர்விடும் அவரின் இறையருளுக்கு நம்மைத் திறந்து வைப்பதிலும் அடங்கியுள்ளது என்றும் கூறினார்.

திருச்சட்டத்திற்கு இயைந்த வகையில் நற்பணிகள் செய்வதைச் சார்ந்து இல்லை, மாறாக கிறிஸ்தவர்களை துன்புறுத்திய தனக்காகவும் இயேசு இறந்தார், இப்பொழுது அவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்ற உண்மையைத் தனது மீட்பு சார்ந்துள்ளது என்பதை பவுல் புரிந்து கொண்டார் என்றும் திருத்தந்தை கூறினார்.

எனவே ஒருவரின் மனமாற்றம் என்பது, இயேசு சிலுவையில் எனக்காக இறந்தார் என்றும், உயிர்த்தெழுந்த அவர் என்னில் என்னோடு வாழ்கிறார் என்றும் நம்புவதாகும் என்றும் திருத்தந்தை விளக்கினார்.

ஒருவர் இயேசுவின் மன்னிப்பின் வல்லமைக்குத் தன்னை அர்ப்பணித்து, அவரால் வழிநடத்தப்பட தன்னை அனுமதிப்பதன் மூலம், பெருமை, பாவம், தன்னலம், தவறான உறுதிப்பாடுகள் ஆகியவற்றினின்று வெளியேறி அவரது அன்பின் வளமையை அறிந்து அவரோடு வாழ இயலும் என்றார் பாப்பிறை.

இன்னும், இந்த மனமாற்றத்திற்கான அழைப்பு, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளான இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றும், கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இலக்கை முழவதும் அடையவில்லையெனினும் கிறிஸ்துவை நோக்கிய மனம்மாற்றத்திற்குத் தொடர்ந்து நம்மைக் கையளித்தால் ஒருநாள் நிச்சயம் அதனை அடைவோம் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.