2009-01-26 14:58:20

அருட்சகோதரி நிர்மலா உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது


ஜன.26,2009. இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி, அன்னை தெரேசாவின் பிறரன்பு சகோதரிகள் சபைத் தலைவி அருட்சகோதரி நிர்மலா ஷோசிக்கு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

இந்து பிராமணக் குடும்பத்தில் இந்திய இராணுவ அதிகாரிக்குப் பிறந்த அருட்சகோதரி நிர்மலா, அன்னை தெரேசாவின் பிறரன்புப் பணியால் கவரப்பட்டு கத்தோலிக்க மதத்தில் சேர்ந்து பிறரன்பு சகோதரிகள் சபையிலும் துறவியானார்.

அன்னை தெரேசாவின் இறப்புக்குப் பின்னர் 1997ம் ஆண்டிலிருந்து அச்சபையை வழிநடத்தி வரும் அருட்சகோதரி நிர்மலா ஷோசியின் பணிகளைப் பாராட்டி பத்ம விபூஷண் விருது இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டிலால் வழங்கப்பட்டது.

அன்னை தெரேசா, 1962ல் பத்மஸ்ரீ விருதையும், 1980ல் பொது மக்களுக்கான மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதையும் பெற்றுள்ளார்.

மேலும், இஸ்ரோ தலைவர் ஜி.மாதவன் நாயர், அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர், சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா உள்ளிட்ட 10 பேர் பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் உட்பட 5 பேருக்கு பத்ம பூஷண் விருதும், நடிகர் விவேக் உட்பட 9 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது, வாய்ப்பாட்டு கலைஞர் பண்டிட் பீம்சேன் ஜோஷிக்கு வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.