2009-01-24 14:50:20

யு டியூப் இணையதள பக்கத்தில் தனக்கென ஒரு பகுதியை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது திருப்பீடம்


ஜன.24,2009. மக்களிடையே ஒலி-ஒளிப் பதிவுகளைப் பகிர உதவும் யு டியூப் எனும் இணையதள பக்கத்தில் தனக்கென ஒரு பகுதியை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது திருப்பீடம்.

யு டியூப் இணையதள பகுதியில் ஏற்கனவே வத்திக்கான் தொடர்புடைய ஒலி-ஒளிப் பதிவுகள் காணக்கிடக்கின்ற போதிலும் வத்திக்கானே நேரடியாகத் தனக்கென ஒரு பகுதியை அதில் திறந்து தனக்குரிய பதிவுகளை இடத்தொடங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

ஏற்கனவே வத்திக்கான் வானொலியும் வத்திக்கான் தொலைக்காட்சி மையமும் தங்கள் இணையதள பக்கங்கள் மூலம் சில நிகழ்வுகளை ஒலிஒளி பதிவு வழியாகத் தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒன்றரை ஆண்டு முயற்சிக்குப் பின்னர் யு டியூப் தளத்திற்குள் ஒரு பகுதியை வத்திக்கானுக்கென ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய புதிய ஏற்பாட்டின்படி யு டியூப் தளம் வழியாக வத்திக்கான் அதிகாரப்பூர்வத் தளங்களுக்கு, குறிப்பாக வத்திக்கான் நகர், வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி போன்றவைகளின் அனைத்துத் தளங்களுக்கும் செல்ல முடியும் என்ற திருப்பீட அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இம்முயற்சிகளுக்கு முதலில் ஊக்கம் கொடுத்தவர் திருத்தந்தையே எனவும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.