2009-01-24 14:53:45

பசியால் வாடும் கென்ய மக்களுக்கு உணவு வழங்க ஆயர்கள் வலியுறுத்தல்


ஜன.24,2009. ஏறத்தாழ ஒருகோடி கென்ய மக்கள் கடும் உணவு பற்றாக்குறையால் துன்புறும் வேளை, அம்மக்களுக்கான உதவி மற்றும் உணவுக்கான வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குமாறு அரசைக் கேட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

ஆப்ரிக்க நாடான கென்ய எதிர்நோக்கும் உணவுப் பிரச்சனைக்கு மோசமான காலநிலை மற்றும் அந்நாட்டுத் தேர்தலுக்குப் பின்னர் இடம் பெற்ற வன்முறையில் அநேக உணவு சேமிப்புக் கிடங்குகள் எரிக்கப்பட்டது காரணமாக இருந்தாலும், அந்நாட்டின் முக்கிய மூலப் பொருளாக இருக்கும் சோளத்தை சூடான் போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பது குறித்த கவலையையும் ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

சில தனிநபர்கள் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்படாமல் சோள ஏற்றுமதியைச் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் உண்மையாயிருந்தால் அத்தகைய குற்றச் செயல்களை வன்மையாகக் கண்டிப்பதோடு அக்குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் கென்ய அரசை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கென்ய மக்கள் உயிர்வாழ்வதற்காக மரவேர்களைச் சாப்பிடுவதை அந்நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.