2009-01-23 18:12:28

சிரிய கத்தோலிக்கரின் புதிய பிதாப்பிதாவை வரவேற்கிறார் திருத்தந்தை .2301


சிரியக் கத்தோலிக்கத் திருச்சபையின் அந்தியோக்கியப் பிதாப்பிதா இஞ்ஞாசே யூனன் யூசுப்பைத் திருத்தந்தை இந்த வெள்ளிக்கிழமை வரவேற்றுப் பேசினார் . சிரிய அந்தியோக்கியத் திருச்சபையின் ஆயர்கள் மன்றம் உரோமையில் ஜனவரி 18 லிருந்து 20 வரை நடந்தது . அதுபோது இஞ்ஞாசே யூசுப்பும் முறைப்படி அந்தியோக்கியாவின் சிரியக் கத்தோலிக்கப் பிதாப்பிதாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதனை வரவேற்று மடல் வரைந்து ஒப்புதல் வழங்கி திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் பாராட்டினார் . திருச்சபை வரலாற்றில் முக்கியப் பொறுப்பேற்றிருக்கும் இஞ்ஞாசே யூசுப்புக்கு திருத்தூதருக்குரிய அருளைப் பொழியுமாறும், புதிய பிதாப்பிதா திருச்சபையில் பணிசெய்யவும் , கடவுளை மகிமைப்படுத்தவும் வரம் தருமாறும் திருத்தந்தை வேண்டிமன்றாடி பிதாப்பிதாவை வாழ்த்தினார் . சிரியாவில் 1944 இல் பிறந்த புதிய பிதாப்பிதா லெபனானிலும் , உரோமையிலும் , கல்வி கற்றவர் . பல ஆண்டுகள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிரியக் கத்தோலிக்கர்களுக்குப் பணிசெய்து வந்தார் . 5 மொழிகள் பேசும் திறன் கொண்டவர் . மேலும் அந்தியோக்கியாவின் சிரியக் கத்தோலிக்க ஆயர் மன்றத்தில் வத்திக்கானின் பிரதிநிதியாக இருந்து வழிநடத்திய வத்திக்கானின் கீழைத்திருச்சபைக்கான மன்றத்தலைவர் மேதகு கர்தினால் லெயனார்டோ சாண்றிக்கும் திருத்தந்தை நன்றியும் பாராட்டும் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.