2009-01-21 18:11:43

எங்கே நிம்மதி - எதிர்காலம் எப்படி இருக்கும் . 21 01 09 .


வாழ்க்கையின் முடிவு என்ன – நிலையில்லா உலகு தரும் நிஜங்கள் என்ன .

வாழ்க்கையில் ஓய்வே இல்லை என்பவர்கள் பொதுவாக ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்துள்ள திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தாதவர்கள் . பல்வேறு தரப்பட்ட திறமைகளை ஆண்டவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ளார் . சிலருக்கு அதிகமாகவும் , சிலருக்கு நடுத்தரமாகவும் , சிலருக்கு குறைவாகவும் திறமைகள் அமைந்துள்ளன . நற்செய்தியில் திறமைகளைப் பயன்படுத்தாமைக்காகவே தண்டனை தரப்படுகிறது . ஏனென்றால் நாம் கொடைகளைப் பெறுவதோடு நின்றுவிடாது , அவற்றைச் செயல்படுத்தவேண்டிய சக்தியும் கொடுக்கப்பட்டவர்கள் . ஏரி ஒன்றில் தண்ணீர் புதிதாக வராமலும் , தண்ணீர் செலவு செய்யப்படாமலும் இருந்தால் தண்ணீர் கெட்டுவிடும் . இயற்கை நமக்கு எடுத்துக்காட்டாக தன் பணியைச் செவ்வனே செய்கிறது . சூரியன் உலகுக்கு ஒளியூட்டுகிறான் . நதிகள் கடலுக்கு விடாது ஓடிக்கொண்டிருக்கின்றன . மரங்கள் கனிகளைத் தருகின்றன . காற்று நமக்கு பிராணவாயுவைத் தந்து உயிர் வாழ உதவுகிறது . இயற்கை தன்னலம் கருதாது , தடையில்லாது தன் பணியைச் செய்கிறது .

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கொடைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் . நம்முடைய உல்லாசப் போக்குக் காரணமாக அவற்றைச் செயல்படுத்தாததால் நம்மைச் செயல் இழக்கச் செய்யலாம் . அடக்கமுடைமை காரணமாக சிலர் தாம் பெற்ற சிறிதளவு கொடைகளை மதிக்காமல் விட்டுவிடுவதைப் பார்க்கிறோம் . சிறிய பாத்திரமும் தண்ணீரைத் தாங்குமே . சிறு செபத்தாலும் கடவுளைப் போற்றலாமே . ஒரு கோவேறு கழுதையும் கூட ஆண்டவர் இயேசுவை எருசலேமுக்குக் பவனியாகத் தூக்கிச் சென்ற பெருமையைப் பெற்றதே .

பயன்படுத்தாத கைகள் செயல் இழந்துபோகும் ஆபத்தில் உள்ளதன . ஐ .நாடுகள் சபை உணவுப்பற்றாக்குறையால் பல ஏழை நாடுகளில் மக்களை நோய் தொற்றிக்கொள்வதாகக் கூறுகிறது . ஆனால் மேலை நாடுகளில் அதிக உணவு உண்பதால் , சரியான உடற்பயிற்சி இல்லாததால் இதய நோயால் தாக்கப்படுகிறார்களே . கல்வி கற்காத நிலையில் மனிதரின் புத்தி மழுங்கிப்போகும் ஆபத்தில் உள்ளது . விவிலிய நற்செய்தியில் தரப்பட்டுள்ள உவமையில் ஒரு தாலந்துப் பணத்தைப் பெற்றவன் அதைப்பயன்படுத்தாது புதைத்து வைத்துவிட்டு தலைவன் வந்தபோது செயலற்ற நிலையில் தண்டனைக்குள்ளானான் . எருசலேத்திலிருந்து எரிக்கோ செல்லும் வழியில் குற்றுயிராக காயப்பட்டுக்கிடந்தவருக்கு அவ்வழியே வந்த குரு எதுவும் செய்யாமல் சென்றுவிட்டார் . தம் வீட்டருகே பட்டினியாகக் கிடந்தவருக்கு பணக்கார முதலாளி எந்த உதவியும் செய்யவில்லை என்பதற்காகத் தண்டிக்கப்பட்டார் .

ஒருவர் மரம் நடுவது அது பழங்களைத் தரும் என்பதற்காகவே . விவிலிலியத்தில் கனி தராத மரத்தை வெட்டிவிடுமாறு தலைவன் கூறுகிறார் . கடவுள் நம்மிடம் கொடுத்துள்ள திறமைகளைச் சரிவரச் செயல்படுத்துவோம் என எதிர்பார்க்கிறார் . தமது திறமைகளை வளர்த்துச் சமுதாயத்துக்குப் பயன்தராதவர் சமுதாயத்துக்குக் கேடுவிளைவிக்கிறார் .

இறைவன் தந்துள்ள அருள் கொடைகளும் ,ஒரு நாட்டின் சட்டமும் நாம் நமக்குத் தரப்பட்டுள்ள அறிவைப் பெருக்குவோம் என எதிர்பார்க்கின்றன . நல்ல நூல்களைப் படிக்காது சாதாரண பொழுது போக்கு நூல்களில் நாம் நேரத்தைச் செலவிட்டால் பின்னர் கருத்தூன்றி சத்தான கருத்துக்களை உள்வாங்குவது கடினமாகிவிடும் . ஆன்மீகக் கருத்துக்களை கிரகிக்கமுடியாமல் போய்விடும் . எதைப் பெறவேண்டுமோ அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளமுடியாமலும் , ஆண்டவனிடம் செபிக்கவே முடியாமலும் போய்விடக் கூடிய ஆபத்து உள்ளது .

ஆன்ம வளர்ச்சியைப் பற்றி அக்கரையில்லாத தன்மையே மிகப்பெரிய இழப்பாகும். ஒவ்வொரு நிமிடமும் நம் மனச் சான்று நமக்கு அடையாளச் சிவப்பு விளக்கைப் பொருத்தி எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறது. நமக்கு முன் இருக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடாதிருக்க எச்சரிக்கை மணி அடிக்கிறது மனச் சான்று . இது நமக்குக் கேட்காமலே தரப்படக்கூடிய ஒளியாகும் . வாழ்க்கையில் ஓடி ஓடி உழைப்பவர்களுக்கு ஓய்வும் , இளையோருக்கு வாழ்க்கையில் நல்ல வசந்தமான எதிர்காலத்தையும் , முதியோருக்கு முடிவில்லாப் பேரின்ப வாழ்வு மறுவாழ்வே எனவும் உறுதி கூறிக்கொண்டே இருக்கிறது . இது நிலையான அமைதியைத் தருவதாகும் . இது மனித மனங்களுக்கு அப்பாற்பட்டது . அதனால் தான் இதற்குப் பெயர் அருள் என்பதாகும் . கடும் உயிர்கொல்லும் காலராவால் தாக்கப்பட்டு மருந்து வேண்டாமென்றிருப்பாரைக் காலன் கவ்விக் கொண்டு போய்விடுவான் . அவ்வாறு அசட்டைத்தனமாய் மருந்து வேண்டாமென்பவரை நாம் என்ன அடைமொழியிட்டு அழைப்பது . வாழ்க்கையில் கடவுள் நல்லவைகளையெல்லாம் இலவசமாகவே கொடுத்துள்ளார் . அவற்றுள் மிகப் பெரியது கடவுள் பற்றோடு வாழ்வதாகும் . ஆம் நாளை நமதாக ஆண்டவன் அருள் வேண்டும் .








All the contents on this site are copyrighted ©.