2009-01-20 07:30:31

புனித பூமியில் வன்முறை நிறுத்தப்படுவதற்கு திருத்தந்தை மீண்டும் அழைப்பு


ஜன.19,2009. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நிலைத்த அமைதியை ஏற்படுத்துவதற்காக உலகத் தலைவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையைத் தொடங்கிய அதேவளை, புனித பூமியில் ஒவ்வொருவருக்கும் இடம் உள்ளது என்று ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை.

காஸா பகுதியில் இடம் பெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான சிறாரும் முதியோரும் பெண்களும் பலியாகுவதைக் குறிப்பிட்டு அங்கு வன்முறையை நிறுத்துவதற்கு முயற்சிக்கும் எண்ணற்ற நன்மனம் கொண்டவர்களுக்காகச் செபிப்போம் என்றார் அவர்.

இதற்கிடையே, காஸாவில் கடந்த 23 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேலும் ஹமாசும் அறிவித்துள்ளன.

இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன.

மின்சாரம், குடிநீர் விந்யோக கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் என நான்காயிரம் கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இருபதாயிரம் கட்டிடங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன







All the contents on this site are copyrighted ©.