2009-01-20 15:16:52

அமெரிக்க புதிய பொருளாதாரத் திட்டங்களில் ஏழைகளின் தேவைகள் கவனம் செலுத்தப்பட கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் வலியுறுத்தல்


ஜன.20,2009. அமெரிக்க ஐக்கிய நாட்டு புதிய அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் புதிய அரசு தனது புதிய பொருளாதாரத் திட்டங்களில் ஏழைகளின் தேவைகள் மீது கவனம் செலுத்துமாறு அந்நாட்டு ஒன்பது கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் பலரின் மாண்பையும் வாழ்வையும் பாதிக்கும் ஏழ்மை அகற்றப்படுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய விவகார ஆணையத் தலைவர் பேராயர் வில்ட்டன் கிரகரி கூறினார்.

இச்செவ்வாய்தின பராக் ஒபாமாவின் பதவிப் பிரமாணத்தையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகள் இணைந்து ஏற்பாடு செய்த நிருபர் கூட்டத்தில் இதனை அறிவித்தார் அட்லாண்டா பேராயர் கிரகரி.

புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்கள் நடுத்தரவர்க்கத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளன என்ற கருத்து பரவலாக நிலவும் வேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்தால் இதனை நிவர்த்தி செய்வதற்கு கிறிஸ்தவ சபைகள் அவசர நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்று பாதிரியார் ஜிம் வாலிஸ் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, ஓராண்டுக்கு மேலாக பணவீக்கத்தின் பாதிப்பைச் சந்தித்து வரும் வேளை, ஏழைகளின் எண்ணிக்கை மூன்று கோடியே 72 இலட்சமாகவும் அவ்வப்போது 4 கோடியே 50 இலட்சமாகவும் இருந்து வருகிறது.

1937ம் ஆண்டிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு புதிய அதிபர்கள் ஜனவரி 20ம் தேதி பதவியேற்று வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.