2009-01-19 15:01:31

மிலான் நகரில் அடுத்த ஏழாவது சர்வதேச குடும்ப மாநாடு


ஜன.19, 2009. அடுத்த சர்வதேச குடும்ப மாநாடு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் என்று, இஞ்ஞாயிறன்று மெக்சிகோ நகரில் நிறைவுபெற்ற ஆறாவது சர்வதேச குடும்ப மாநாட்டின் நிறைவில் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

மெக்சிகோ நகரில் ஐந்து நாட்கள் நடைபெற்ற ஆறாவது சர்வதேச குடும்ப மாநாட்டின் நிறைவுத் திருப்பலியில் இஞ்ஞாயிறன்று கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு திருத்தந்தை அனுப்பிய ஒலி-ஒளி செய்தியில் “குடும்பம், பணி, கொண்டாட்டம்” என்ற தலைப்பில் அடுத்த சர்வதேச குடும்ப மாநாடு மிலானில் நடைபெறும் என்றார்.

மேலும், குடும்பத்தின் கலாச்சாரம் மற்றும் அரசியலை ஊக்குவிப்பதற்கு மெக்சிகோவிலும், இன்னும் உலகெங்கிலுமுள்ள குடும்பங்கள் தங்களுக்குத் தாங்களே உந்துதல் கொடுக்குமாறும் அச்செய்தியில் வலியுறுத்தினார் திருத்தந்தை.

மெக்சிகோ நகர் குவாதாலூப்பே அன்னைமரியா பசிலிக்காவில் நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவுத் திருப்பலி முடிவுறுமுன்னர் திருத்தந்தையின் இச்செய்தியை விசுவாசிகள் ஒலி-ஒளி அமைப்பு மூலம் கேட்டனர். சனிக்கிழமை மாலையே ஒளிபரப்பப்படவிருந்த இச்செய்தி, மழையின் காரணமாக ஞாயிறன்று இடம் பெற்றது.

குடும்பங்களின் தனித்துவத்தையும் உரிமைகளையும் வளர்க்க முயற்சிக்கும் கழகங்களுடன் குடும்பங்கள் தங்களை இணைக்குமாறும் கேட்டுக் கொண்ட அவர், இம்முயற்சிகள் அதிகப் பலன் அளிப்பதற்கு உதவியாக, இந்தக் கழகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படவும் வலியுறுத்தினார்.

குடும்பம், அதன் உண்மையான தனித்துவத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது, இந்தத் தனித்துவம், சேர்ந்து வாழும் பிற முறைகளோடு குழப்பக்கூடாது என்றும் திருத்தந்தை கூறினார்.

கலாச்சார, சட்ட, பொருளாதார, சமூக, நலவாழ்வு ஆகியவற்றில் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றரைத்த அவர், குடும்பங்கள் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசுகள் உரிமை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.