2009-01-19 14:20:05

புனித பவுலின் ஆன்மீகம்


ஜன.19,2009. ஆன்மீகம் என்றவுடன் நம்மில் சிலருக்கு ஆசிரமங்களில் வாழும் சுவாமிகள் பற்றிய எண்ணங்கள் பிறக்கலாம். பக்தர்களை இலட்சம் இலட்சமாக ஈர்க்கும் புண்ணியத் தலங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் உண்மையில் ஆன்மீகம் என்பது என்ன? ஆன்மீகத்தில் சிறந்தவர் என்று பலராலும் சுட்டிக் காட்டப்படுபவர்கள் யார்? இந்தக் கேள்வியை, பல நிலைகளில் உள்ளவர்களை வழிநடத்தும் இயேசுசபை அருட்தந்தை அருள்சிவன் அவர்களிடம் முன்வைத்தோம்.

RealAudioMP3

ஆம். ஆன்மீகம் என்பது ஓர் அறநெறி வாழ்க்கைமுறை. இறையியலில் இதனை அருள்வாழ்வு என்கிறார்கள். இது கடவுளோடு ஒன்றித்த வாழ்வு. தன்னலமற்ற வாழ்வு. இவர்கள் போதிப்பது வாழ்வில் மிளிரும். அதேசமயம் இவர்கள் வாழ்வே போதனையாக இருக்கும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த புனித பவுலின் ஆன்மீகமும் இதேமாதிரிதான் இருந்தது என்று அவரது எழுத்துக்களில் காண முடிகின்றது. சுருங்கச் சொல்லின் புனித பவுலின் ஆன்மீகம் கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. அவரது வாழ்வு கிறிஸ்துவில் மட்டுமே இயங்கியது. உண்டாலும் உறங்கினாலும் உழைத்தாலும் செபித்தாலும் போதித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாமும் கிறிஸ்துவாகவே இருந்தன. இது எப்படி எனப் பார்ப்போம்.

புனித பவுலின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது அவரது தமஸ்கு அனுபவம். அதாவது பவுல், தமஸ்கு சாலையில் உயிர்த்த இயேசுவால் தடுத்து ஆட்கொள்ளப்படு முன்னர் அவர் ஒரு யூதமதத் தீவிரவாதியாகத்தான் செயல்பட்டார். புதிதாக வளர்ந்து வந்த கிறிஸ்தவத்தையும் கிறிஸ்தவர்களையும் அழித்து விடுவதில் முனைப்புடன் செயல்பட்டார். ஆனால் தமஸ்கு சாலையில் உயிர்த்த இயேசுவைக் கண்ட பின்னர் அவரது வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. இயேசுவின் பரம எதிரியாக இருந்த அவர், இயேசுவின் பரம விசிறியானார். அந்த அனுபவம் பற்றிச் சொல்லும் போது, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் போன்று தன்னையும் இறைவன் அழைத்தார், அதுவும், தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள்( கலா.1,15) என்கிறார்.

இவ்வாறு தனது அழைப்புப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் பவுல், கிறிஸ்துவைச் சந்தித்த பின்னர் இவ்வுலகில் பெயரும் புகழும் பணமும் பதவியும் தனக்குப் பெரிதாகத் தெரியவில்லை என்கிறார். இதனை அவர் பிலிப்பியருக்கு எழுதிய மடலில்,

“எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.8 உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன் “ (3:7- 8)

என்கிறார். எனவே பவுலுக்கு கிறிஸ்து இயேசுவே எல்லாம் என்று ஆனபிறகு அவருக்கு கிறிஸ்துவின் அருளே அவரது பணிக்கு ஆற்றல் தந்தது என்று ஆணித்தரமாக உணர்ந்தார். இதனை அவர் கொரிந்தியரிடம், “நான் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்“( 1கொரி.15,9-10) என்று சொல்கிறார். இவ்வாறு அவர் கடவுளின் பேரன்பை ஆழமாக உணர்ந்தார். எனவே பவுலது சொல்லும் செயலும் கிறிஸ்து மீது அவர் கொண்டிருந்த ஆழமான உறவை வெளிப்படுத்தியது.

பவுல் தனது நற்செய்திப் பணியில் கிறிஸ்துவுக்காகத் தான் ஏற்றுக் கொண்ட துன்பங்கள் பற்றிச் சொல்லும் போது, “இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்““( 2கொரி.04,10) என்றும்,

பன்முறை சிறையில் அடைபட்டேன்: கொடுமையாய் அடிபட்டேன்: பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்: ஒருமுறை கல்லெறிபட்டேன்: மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்: ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்: அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்: பன்முறை கண்விழித்தேன்: பசிதாகமுற்றேன்: பட்டினி கிடந்தேன்: குளிரில் வாடினேன்: ஆடையின்றி இருந்தேன்“( 2கொரி11,23-27)

என்றும் விளக்குகிறார். பவுல் இத்தனை துன்பங்களையும் ஏற்றதற்குக் காரணம் அவர் கிறிஸ்து மீது கொண்டிருந்த பேரன்பு. கிறிஸ்து தன்மீது பேரன்பு கொண்டிருக்கிறார் என்ற அவரது ஆழமான நம்பிக்கை. அவர் மறுகிறிஸ்துவாகவே மாறியிருந்தார். அன்பர்களே, உண்மையான இறைபக்தர்களின் வாழ்வு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. இச்செவ்வாயன்று திருச்சபை விழா எடுக்கும் புனித செபஸ்தியாரை எதிரிகள் பிடித்துக் கட்டி அம்புகளை எய்தார்கள். அவர் இறந்துவிட்டார் எனக்கருதி அவரை அங்கேயே குற்றுயிராய் விட்டுச் சென்றனர். ஆனால் அவரோ, தன்னைக் கொல்ல ஆணையிட்ட நடுவனிடம் போய், தயவு செய்து இயேசுவை விசுவசியுங்கள் என்றார். உடனே அவனே தடிகளால் செபஸ்தியாரை அடித்துக் கொல்ல உத்தரவிட்டான். அன்பர்களே, இந்தக் கொடூரம் இன்றும் உலகின் பல இடங்களில் அரங்கேறுகின்றது. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்ததை யாராலும் மறக்க முடியாது. கிறிஸ்தவர்கள் என்பதற்காகச் சித்ரவதை செய்யப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். பலர் மனித மாண்புகளை இழந்தனர்.

பெரிய மதங்களின் பிறப்பிடமான ஆசியாவில் வாழ்ந்த பல தவயோகிகளுடைய வாழ்வு நமக்குத் தெரிந்ததே. ஒருகாலத்தில் வன்முறையை வன்முறையைக் கொண்டே முறியடிக்க வேண்டும் என்று எண்ணித் தீவிரமாகச் செயல்பட்ட இந்திய தேசபக்தர்களுள் ஒருவர் அரவிந்த கோஷ். அவர் அலிபூர் சிறையில் தன்னந்தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த போது இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். சிறைவாழ்வில் ஓர் இனிய குரல் அவரது உள்மனத்தில் கேட்டது.

“நீ இல்லாவிட்டால் எல்லாம் கெட்டுவிடும் என்று நினைத்து வந்தாய். இப்போது கவனி. உன் இச்சைப்படி ஒன்றும் நடக்காது. உன்மூலம் நான் வேறு காரியங்களைச் செய்ய எண்ணியிருக்கிறேன். என் எண்ணம்தான் நிறைவேறும். அதற்கு உன்னைத் தயார் செய்வதற்காகவே இந்தச் சிறையில் தன்னந்தனியாக அடைத்து வைத்திருக்கிறேன்“

இவ்வாறு பகவான் சொல்லி கீதையைத் தந்து கையில் வைத்ததாக அரவிந்த சொல்லியிருக்கிறார். அதன்பின்னர் அவர், கீதைப் போதனைகளின் உட்பொருளை உணர்ந்து நடந்தால் கவலையில்லை என்பதை உணர்ந்தார். அவரில் பெரிய மனமாற்றம் நிகழ்ந்தது. சிறை அதிகாரிகளிடம், வழக்கறிஞர்களிடம், சக கைதிகளிடம், சிறைக் கதவுகளில், இப்படி எல்லோரிலும் எல்லாவற்றிலும் பகவானைப் பார்த்தார். சிறையிலிருந்து விடுதலை பெற்றார். உன் கடமைகளைச் செய்வதில் சோம்பலோ விருப்பு வெறுப்போ இருக்கக் கூடாது. நீ கடமைகளை நிறைவேற்றும் போது அவற்றால் கிடைக்கும் பலன்கள் பற்றிச் சிந்திக்காதே போன்ற போதனைகள் அவரை மாற்றின. “நான் இல்லாமல் எதுவுமே நடக்காது” என்று அவரில் இருந்த இறுமாப்பு தொலைந்து அடக்கமே உருவானவராக மாறினார். இவையெல்லாம் அரவிந்த தன்னைப் பற்றி எழுதி வைத்தவை.

ஆம். ஆன்மீகம் என்பது வாழ்க்கையை மறுதலிப்பதல்ல, மாறாக அதனை ஏற்றுக் கொள்வது. வெற்றி தோல்வி, சுகம் துக்கம் இவற்றை ஒரே மனநிலையில் ஏற்பது. ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் கழிக்கக் கற்றுக் கொள்வது. நம்மைச் சுற்றியுள்ள அழகை ஒவ்வொன்றாகக் கண்டு இரசிப்பது. கருணை நிரம்பி வழியும் கண்களுடன் உலகை ஒளியுடன் உற்று நோக்குவது. ஒவ்வொரு உயிரிலும் இறைமையைக் காண்பது. இந்த நிலையை அடைய தனித் தகுதிகள் எதுவும் தேவை என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் சுயத்தையும் தன்னலத்தையும் இழக்க முன்வந்தாலே போதுமானது என்கிரார்கள்.

புனித பவுலுக்குத் தமஸ்கு செல்லும் வழியில் நேர்ந்தது போன்று எல்லாருக்கும் நிகழும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் பவுல் அந்த ஒரு நொடிப் பொழுது கிறிஸ்து இறையனுபவத்திற்குப் பின்னர் தன்னை முழுமையாக மாற்றத் தயாராகி ஞானதீட்சை பெற்று பின்னர் இறைபணிக்கென 14 ஆண்டுகள் தனிமையில் தன்னை தயார் செய்தார். தனது முந்தைய வாழ்க்கைப் பிடிப்புக்களை முற்றிலும் இழக்கத் துணிந்தார். ஆம். அன்பர்களே, ஆன்மீகத்திற்கு தன்முனைப்பை, தான் என்ற அகங்காரத்தை, சுயநலத்தை, பிடிவாதத்தை உதிர்க்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது வெறியாய் இருப்பதன் மூலம் இறைமையை அடைய முடியாது. எல்லா உயிர்களும் இப்பிரபஞ்சத்தின் பிஞ்சுக் குழந்தைகள், ஒரே கடவுளின் அன்புக் குழந்தைகள் என்ற உணர்வே ஆன்மீகத்தை வளர்க்கிறது. ஆன்மீகம் கோணல்களை நிமிர்த்துவதில்லை. மாறாக அவற்றைப் புரிந்து கொள்ள ஒத்துழைக்கிறது. நேர்மையையும் கருணையையும் அன்பையும் மனித நேயத்தையும் வளர்க்கப் பன்னீர் மழை பொழிவிப்பதுதான் ஆன்மீகத்தின் பணி. முயற்சிப்போமா இந்தப் புனித பவுல் ஆண்டில்!








All the contents on this site are copyrighted ©.