2009-01-17 11:43:19

மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கு அரசியல் ரீதியான ஆர்வம் குறைவு, திருப்பீடம் கவலை


ஜன.17,2009. மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான பல முயற்சிகள் தோல்வியடைந்திருப்பதற்குக் காரணம் அரசியல் ரீதியான ஆர்வம் குறைவுபடுவதே என்று திருப்பீடம் குறை கூறியது.

ஆக்ரமிக்கப்பட்ட கிழக்கு எருசலேம் மற்றும் பிற பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் சட்டத்துக்குப் புறம்பேயான நடவடிக்கைகள் என்ற தலைப்பில் ஐ.நா. பொது அவை நடத்திய பத்தாவது அவசர சிறப்பு அமர்வில் நேற்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே இவ்வாறு கூறினார்.

கொடூரமான தாக்குதல்களை எதிர்நோக்கும் காசா மற்றும் சில இஸ்ரேல் நகரங்களில் வாழும் அப்பாவி மக்களுடனான திருப்பீடத்தின் ஒருமைப்பாட்டு உணர்வையும் பேராயர் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கிடையேயான வாழ்வில் கடந்த அறுபது ஆண்டுகளாகக் காணப்படும் துன்பம் நிறைந்த வரலாற்றில் தொடர் மோதல்களும், ஏன் பேச்சுவார்த்தைகளும் உள்ளடங்கியுள்ளன, எனினும் துரதிஷ்டவசமாக அமைதியைக் கொண்டு வருவதற்கான பல முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன என்றார் அவர்.

அனைத்து தரப்புகளிலும் போதுமான தைரியமும் ஒன்றிணைந்த அரசியல் ஆர்வமும் இல்லாததே இத்தோல்விக்குக் காரணம் என்றும் பேராயர் கவலை தெரிவித்தார்.

ஐ.நா.பாதுகாப்பு அவை ஒருவாரத்திற்கு முன்னர் நிறைவேற்றிய, உடனடி போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய வழி அமைத்தல் ஆகியவை முழுமையாக அமல்படுத்தப்படுமாறும் பேராயர் மிலியோரே கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.