2009-01-16 18:29:15

மனித வாழ்வு புனிதமானது என்கிறார் அதிபர் புஷ் .160109 .


ஜனவரி 18 வரும் ஞாயிறு தினத்தை அமெரிக்காவில் தேசியதினமாக மனித வாழ்வு புனிதமானது எனக் கொண்டாடுமாறு அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் புஷ் . ஒவ்வொரு மனித வாழ்வும் கடவுளின் புனிதமான கொடை , தனிச்சிறப்பு வாய்ந்தது , பாதுகாப்புக்குரியது என அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார் . 1973 ஆம் ஆண்டு ஜனவரி 22 ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கருச்சிதைவை சட்டமயமாக்கியது . இம்மாதம் 15 ஆம் தேதி இதுபற்றிக்கூறிய அதிபர் புஷ் ஒவ்வொரு மனிதரும் , பிறக்கவிருக்கும் குழந்தையும் உலகில் தனிச் சிறப்பான வாழ்வுக்கு உரிமையுடையவர்கள் . வாழ்வில் அவர்களுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது . நம் மனச்சான்றுப்படி வலுவில்லாதவர்களையும் , குரல் எழுப்பமுடியாதவர்களையும் பாதுகாக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் . மனித மாண்பைப் போற்றும் அமெரிக்கர்கள் பல சிறப்பான கொண்டாட்டங்கள் வழியாகச் சிறப்பிக்குமாறு அதிபர் புஷ் அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார் . இதனைக் கொண்டாடும் விதமாக வாஷிங்கடனில் உள்ள தேசிய அமல உற்பவ மாதா திருத்தலத்தில் இச்சனிக்கிழமை மாலை மாலை நேர திருப்பலி நடக்கவுள்ளது. 16000 இளைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர் . இரவு முழுவதும் கண்விழித்து கருச்சிதைவுக்கு எதிராக வாழ்வைப்போற்றிக்காக்கும் வண்ணம் செபிக்க உள்ளனர் . பிலடெல்பியாவின் பேராயர் கர்தினால் ஜஸ்டின் ரீகாலி திருப்பலியில் முதன்மைக் குருவாக இருந்து மறையுரை நிகழ்த்தவுள்ளார் .

இதே நாளில் மனித வாழ்வின் மாண்பினைப் போற்ற வத்திக்கான் 95 ஆவது குடியேற்றதாரர்களின் தினமாகத் திருச்சபையில் கொண்டாடுமாறு முன்னரே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது








All the contents on this site are copyrighted ©.