2009-01-14 17:54:14

திருத்தந்தையின் மறைபோதகம் – ஜனவரி 14 .


கடந்த பல வாரங்களாகவே உரோமையில் சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது . தட்ப வெப்பம் 8 டிகிரிக்கும் பூஜ்யத்துக்கும் இடையே பகல் இரவு நேரங்களில் மாறிக்கொள்கிறது . ஆனால் உரோமையில் எந்நாளும் விழாக் கோலம்தான் .

இன்று திருத்தந்தையின் மறைபோதகம் முந்நாள் திருதத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இருந்தது . வழக்கம் போல அரங்கத்தில் திருப்பயணியர் நிரம்பி வழிந்தனர் .

இன்றும் திருத்தந்தை திருத்தூதர் பவுல் பற்றி மறையுரை வழங்கினார் . வந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார் . திருத்தூதர் பவுல் கொலோசையருக்கும் எபேசியருக்கும் வரைந்திருந்த மடல்கள் பற்றித் திருத்தந்தை மறை போதகம் செய்தார் . இவற்றிற்கு இரட்டைக் கடிதங்கள் என்று அடைமொழி கொடுத்தார் . இவற்றின் மொழிநடை ஒரே மாதிரியாக உள்ளன . இரண்டு மடல்களும் கிறிஸ்து திருச்சபைக்கும் , அகில உலகுக்கும் தலையாக இருப்பதாகக் கூறுகின்றன . உலகில் உள்ள எதிர் சக்திகள் அனைத்துக்கும் மேலாக கிறிஸ்து இருப்பதாக மடல்கள் கூறுகின்றன . கிறிஸ்து மட்டுமே நம்மை அன்பு செய்து நமக்காக தம்மையே கையளித்தார் . எனவே அவரோடு நாம் நெருங்கியிருந்தால் எந்த துன்பத்துக்கும் நாம் அஞ்சத்தேவையில்லை . உலகில் உள்ள எல்லாவற்றையும் கிறிஸ்துவில் ஒன்றிணைக்கக் கடவுள் விரும்பினார் . கிறிஸ்து வழியாகத்தான் அனைத்தும் உருவாக்கப்பட்டன . அவருடைய இரத்தத்தின் வழியாக நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் . கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்பது அவர் திருச்சபைக்கும் மேலாக இருக்கிறார் என்று பொருள்படும் . அவர் திருச்சபையின் எல்லைகளுக்கு அப்பால் அரசாள்கிறார் . உலகம் முழுவதும் என்பதைவிட , திருச்சபை அவருடைய உடலாகக் கருதப்படுகிறது . இந்த மடலில் கிறிஸ்து மணவாளனாக உருவகிக்கப்பட்டு , திருச்சபை என்னும் மணமகளுக்காக அவர் தன் வாழ்வையே கொடுத்து ,திருச்சபையைத் தமதாக்கிக் கொண்டதாகக் கூறுகிறார் திருத்தூதர் பவுல் . இதைவிட வேறு மேலான அன்பு எதுவாக இருக்க முடியும் . ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய மாசில்லாத நன்னெறி மிக்க வாழ்வால் குறையோ சுருக்கமோ இல்லாது அழகாக வளரவேண்டும் எனக் கிறிஸ்து விரும்புகிறார் . வரவிருக்கும் நிறைவான மணவிழாவுக்குக் காத்திருக்கும் நாம் , நேர்மையாகவும் நீதியோடும் வாழ்ந்து , ஏற்கனவே கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள மண வாழ்வுக்குச் சான்றுபகர்ந்து வாழ்வோமாக என மறைபோதகம் வழங்கினார் . வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறி , உரோமையில் அவர்கள் திருப்பயணம் கொண்டுள்ள இத்தருணம் திருத்தூதர் பவுலின் மாதிரியைப் பின்பற்றி எப்பொழுதும் , எல்லாவற்றிற்கும் கிறிஸ்துவின் பெயரால் தந்தையாகிய கடவுளுக்கு நன்றி கூறுமாறு கேட்டுக் கொண்டு தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.