2009-01-13 14:54:25

இலங்கையின் சண்டே லீடரின் ஆசிரியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை


இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடரின் ஆசிரியர் லசாந்த விக்ரமதுங்க சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த நேரத்தில் தனது காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை படுகொலை செய்யப்பட்டார். தலையில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு அவசர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இப்படுகொலையானது, தனியார் ஒலி-ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு தினங்களுக்குள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஊடகத்துறை நிறுவனங்கள், ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வருவது மிகுந்த கவலை தருவதாக இருப்பதாகக் கூறும் ஆயர்களின் கண்டன அறிக்கை, இத்தகைய அட்டூழியங்களைச் செய்தவர்கள் பாரபட்சமின்றி உடனடியாக நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அரசையும் சட்ட அமைப்பாளர்களையும் கேட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் போன்ற தைரியமான மற்றும் திறமையான ஆட்களை இனம் தெரியாத கொலையாளிகளின் கரங்களில் இழப்பது வருத்தத்துக்குரியது என்று இலங்கை ஆயர் பேரவையின் செயலர் ஆயர் நார்பெர்ட் ஆந்ராதி கவலை தெரிவித்தார்.



நேற்று நடைபெற்ற லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டி கைகளை உயர்த்தியவாறு மௌனமாக வந்தனர்.








All the contents on this site are copyrighted ©.