2009-01-12 14:57:03

புனித பவுலின் இறைபுகழ் செபம்


இரஷ்யாவின் ஒரு சிறிய நகரத்தில் வாழ்ந்த யூதர்கள் தங்கள் மதக்குருவின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். அந்த யூதமத ரபியும் வந்தார். தன்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டுப் பதிலைப் பெறுவதற்காக அவர்கள் ஆவலுடன் காத்திருப்பதை உணர்ந்தார். ஆயினும் அவர் வாய் திறக்கவில்லை. சிறிது நேரம் அங்கு மயான அமைதி நிலவியது. பின்னர் குரு ஒரு பாடலை ஹம் பண்ணத் தொடங்கினார். கூடியிருந்தவர்களும் அவரோடு சேர்ந்து ஹம் பண்ணத் தொடங்கினர். பின்னர் அவர் அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார். அனைவரும் அவரோடு சேர்ந்து பாடினர். அதன் பின்னர் குரு நடனமாடத் தொடங்கினார். சபையோரும் நடனமாடத் தொடங்கினர். இப்போது அவர்கள் தங்களையே மறந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒருமணி நேரத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய நடன அசைவுகள் நிற்கத் தொடங்கின. உள்மனத்தின் ஆழத்திலிருந்து கிளம்பிய ஒரு பரவச உணர்வுடன் அவர்கள் அமர்ந்தார்கள். அந்த அறை முழுவதும் அமைதி நிறைந்திருந்தது. அப்போது அந்தக்குரு உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிவிட்டேன் என்றார். அன்பர்களே, ஒருசமயம் ஒரு முஸ்லீம் துறவியிடம், நடனம் வழியாகப் பிரார்த்தனை செய்வது ஏன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், கடவுளை வழிபடுவது சுயத்திலிருந்து விடுபடுவதற்காக. நடனம் சுயத்தை அழிக்கின்றது. சுயம் இல்லாத போது எல்லாப் பிரச்சனைகளும் அதனோடு அழிந்து விடுகின்றன. சுயம் இல்லாத இடத்தில் கடவுள் இருக்கிறார் என்றார்.

ஆம். நாம் சுயத்திலிருந்து விடுபடுவதற்காகச் செபிக்கிறோம். தீராத கடும் நோயிலிருந்து குணமடைவதற்காக, பிள்ளைகளின் நற்படிப்புக்காக, அவர்களின் நல்ல எதிர்காலத்திற்காக, கடன் தொல்லை தீருவதற்காக, வேலைவாய்ப்புக்காக இப்படி பல தேவைகளுக்காக மன்றாடுகிறோம். இவ்வாறு நாம் ஒவ்வொரு நாளும் சொல்லும் செபங்கள் அனைத்தையும் வல்லுனர்கள், இறைவேண்டுதல், இறைபுகழ் என இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். நாம் கடவுளிடம் மன்றாடுவதை, வேண்டுவதை, இறைஞ்சுவதை, கேட்பதை, கெஞ்சுவதை, அழுவதை, புலம்புவதை, நம்புவதை மற்றும் பரிந்துரைப்பதை இறைவேண்டுதல் செபம் என்றும், கடவுளைப் புகழ்வதை, போற்றுவதை, ஏத்துவதை, ஆராதிப்பதை, ஸ்தோத்திரப்பதை, அவரைப் புகழ்ந்து ஆடிப்பாடுவதை, இசைப்பதை, நமஸ்கரிப்பதை, வாழ்த்துவதை மற்றும் நன்றி கூறுவதை இறைபுகழ் செபம் என்றும் வகைப்படுத்துகின்றனர். புனித பவுலின் செபங்களும் இந்த இரண்டு வகை நிலைகளைக் கொண்டுள்ளன. முதல் வகையான இறைவேண்டுதல் செபம் பற்றிக் கடந்த வார நிகழ்ச்சியில் கேட்டோம். இன்று இறைபுகழ் செபம் பற்றிக் கேட்போம்.

இறைபுகழ் செபத்தில் முதலில் வருவது நன்றியுணர்வு. பக்தர்கள் தங்கள் நேர்ச்சைகளை செலுத்துவதும் நன்றியின் அடையாளமே. உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு தலையை மழித்து தலைமுடியை நன்றிக் காணிக்கையாக்குகின்றனர். கால் கொடுத்த கடவுளுக்கு கால் செய்து வைக்கின்றனர். இவ்வாறு ஒருவர் தனது வாழ்வில் இறைவன் செய்த நலன்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இறைவனும் இந்நன்றியுணர்வை எதிர்பார்ப்பதாக வேத புத்தகத்தில் வாசிக்கிறோம். இயேசு, பத்து தொழுநோயாளர்களுக்குக் குணமளித்த போது, திரும்பி வந்து நன்றி சொன்ன ஒருவரைப் பார்த்து அவர், கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே என்று சொன்னதை லூக்கா நற்செய்தி பிரிவு 17,18ல் வாசிக்கிறோம். புனித பவுலின் செப வாழ்விலும் இந்த நன்றியுணர்வு செபம் மோலோங்கி இருக்கின்றது. அவர், தனக்காக, தன் மக்களுக்காக, தான் கட்டிக்காத்த சபைகளுக்காக என்று பல வடிவங்களிலே கடவுளுக்கு நன்றி செலுத்துவதை அவரது ஒவ்வொரு மடலிலும் காண முடிகின்றது. எடுத்துக்காட்டாக, பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் மடலில் (1:2,3ல்,)

நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், கடவுள் வார்த்தையை நீங்கள் மனித வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடையறாது நன்றி கூறுகிறோம்

என்றும், பிலிப்பியருக்கு (1:3)எழுதிய மடலில், உங்களை நினைவுகூரும் பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றும், இன்னும் உரோமையர், கொலோசையர், கொரிந்தியர் ஆகியோருக்கு எழுதிய மடல்களிலும் இந்த நன்றியை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்வாறு பவுல், தனது மக்களுக்கு இறைவன் செய்தவைகளுக்கு நன்றி கூறுகிறார். அத்துடன் தனது சொந்த வாழ்விலும் இறைவனின் தலையீடுகளை நினைத்து நன்றி தெரிவிக்கிறார். அவர் கொரிந்தியரிடம் (1கொரி.14:18), நான் உங்கள் அனைவரையும் விட மிகுதியாகப் பரவசப்பேச்சு பேசுகிறேன். அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் என்றும், திருமுழுக்கு மற்றும் திருத்தூதர் சார்பு பற்றிய பிரச்சனைகளில் ஆண்டவர் என்னை ஈடுபடுத்தவில்லை, இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் ( 1கொரி.1,14-15 ) என்றும் எழுதியிருக்கிறார்.

இன்னும், பவுலின் செபம் வெறும் புகழ்ச்சி செபமாக இருந்ததையும் காண முடிகின்றது. அவர் பிலிப்பியர் 4,20ல், நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக என்றும், உரோமையர் 16,27ல், ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென் என்றும் இறைவனைப் புகழ்ந்து செபிக்கிறார். மேலும், பவுலின் நற்செய்தி பணியின் முக்கியமான கட்டங்களில், அப்பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போதும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் எல்லா வேளைகளிலும் அவர் செபித்திருக்கிறார். எனவேதான் அவர் எபேசியர்களிடம் (6,18-20),

எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்: எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள். நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள். நான் பேச வேண்டிய முறையில் அதைத் துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள்.

என்கிறார். அவர், (1தெச.5,17-18) தெசலோனிக்கரிடம், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் என்றும் சொன்னார். அன்பர்களே, நன்றிகூறும் குணநலன் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார், நன்றி மறப்பது நன்று அன்று என்ற குறள்வரிகளை அடிக்கடி கேட்கிறோம். எனவே நம் உள்ளத்தில் நன்றியுணர்வு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த நன்றியுணர்வு அன்றாட வாழ்க்கையை புனிதமாக்குகிறது என்று சு பென்டர் என்பவர் கூறுகிறார்.



அன்பர்களே, ஒருசில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து வாழ்வை திருப்பிப் பாருங்களேன். நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை உணருவீர்கள். நாம் தாயின் வயிற்றிலிருந்து வெளிவர உதவிய மருத்துவச்சி முதல் நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், வாழ நல்வழி காட்டிய பெரியோர், அவசரத்தில் உதவிய நண்பர்கள், பாதுகாப்பாக பயணம் செய்ய உதவும் வாகன ஓட்டி என நிறைய பேர் மனக்கண்முன் வருவார்கள். நன்றியுணர்வுள்ள இதயத்தில் கர்வம் தலைதூக்காது. கர்வத்தாலும் அகந்தையாலும் மற்றவர்களை மனத்தளவில் துன்புறுத்தி தானும் துன்புறும் கொடுமை அரங்கேறாது. அதற்கு மாறாக நன்றியுணர்வு வெளிப்படும் போது முகத்தில் இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சி பிறக்கத் தொடங்கும். முகம் பொலிவடையும். உறவுகள் எளிதாகும்.

மாறாக நன்றியின்மை, மரியாதையின்மை என்ற குணக்கேட்டின் வெளிப்பாடு. அவமதித்தல் எகத்தாளம் போன்ற குணக்கேடுகளின் வெளிப்பாடு. இக்குணக்கேடுகள் ஒருவரில் வெறுமையை உருவாக்கி அவரது அருமையை மறைக்கின்றன. மற்றவரின் அருமைகளையும் மறைக்கின்றன.

நன்றி நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் மற்றவர்களைத் திருப்திபடுத்தலாம். ஆனால் நன்றியுணர்வை நடைமுறைபடுத்தும் போது ஒருவர் தன்னையே திருப்திபடுத்தலாம். நன்றியுணர்வோடு இருத்தல் மிகப்பெரிய தியானமுறை என்றும் சொல்கிறார்கள்.

எனவே நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டையும் கொண்டாடவுள்ள அன்புத் தமிழ் உள்ளங்களே, இறைவன் இதுவரை உங்கள் வாழ்வில் செய்த அனைத்தையும் நினைத்து நன்றி சொல்லி அவரைப் புகழுங்கள். அன்பான இறைவா, இந்த வாழ்வு எனும் கொடைக்கு நன்றி. பெற்றோருக்கு நன்றி. பிள்ளைகளுக்கு நன்றி. உறவுகளுக்கு நன்றி. உடல்நலத்துக்கு நன்றி. உமது அருட்கொடைகளுக்கு நன்றி என்று நா தழுக்கச் சொல்லுங்கள். அந்நேரத்தில் உங்கள் உள்ளத்தில் ஆழ்ந்த அமைதி ஏற்படுவதை உணர்வீர்கள். உங்கள் அனுபவங்களை எழுதுவீர்களா?

ஒரு நன்றியுள்ள இதயத்தின் மகிழ்வான வாழ்வுக்கு இவைதான் காரணங்கள் என்கிறார் தாவோயிஸத்தின் தந்தையான தாவோ சு.

உனது நிறைவுக்காக அடுத்தவரை எதிர்நோக்கினால் நீ ஒருநாளும் உண்மையிலேயே நிறைவடையமாட்டாய்.

உனது மகிழ்ச்சி பணத்தைச் சார்ந்து இருந்தால் நீ ஒருநாளும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய்.

இருப்பதில் திருப்தி கொள். அததது இருக்கும் நிலையிலே ஆனந்தம் அடை. அப்போது

எதுவுமே குறைவுபடவில்லை என்று நீ உணருவாய். இந்த அகில உலகுமும் உனக்குச் சொந்தமாகும்.

 








All the contents on this site are copyrighted ©.