2009-01-12 08:55:49

திருப்பீடச் செயலர் வத்திக்கான் நீதிமன்றத்தின் நீதி ஆண்டை தொடங்கி வைத்தார்


ஜன.10,2009. நீதி நிர்வாக அமைப்பில் உள்ளவர்கள் எல்லாருக்கும் மேலான உயர் நீதிபதியான கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் என்ற உணர்வில் எப்பொழுதும் கடவுளுக்குப் பயந்து பணி செய்ய வேண்டும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.

வத்திக்கான் நீதிமன்றத்தின் நீதி ஆண்டை இன்று திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைத்த கர்தினால் பெர்த்தோனே, நீதித்துறையில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த திருப்திக்காக அல்லாமல், பொதுநலனைப் பாதுகாப்பதற்காகவும் வலுவிழந்தோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவும் செயல்படுமாறு வலியுறுத்தினார்.

சட்டம் எப்பொழுதும் வலுவிழந்தோருக்கு வலு கொடுப்பதாக இருக்க வேண்டும், இது தன்னிலே உரிமையின் சக்தியைக் கொண்டுள்ளது என்றும் கூறிய அவர், நீதிபதி கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற உணர்வில் எப்பொழுதும் செயல்படுமாறு கூறினார்.

நீதிபதிகள் எப்பொழுதும் உண்மையை மதித்து நடக்கவும் மனித மாண்பு முன்வைக்கும் சவால்களுக்கு கவனமாக இருக்கவும் அவர்களுக்காகச் செபிக்குமாறும் திருப்பீடச் செயலர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

மனிதனை அன்பு செய்வது அனைத்து சமூக மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அடித்தளமாகவும் முக்கிய பண்பாகவும் இருக்கின்றது என்றும் கர்தினால் பெர்த்தோனே தனது மறையுரையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.