2009-01-12 15:19:18

இயேசுவின் திருமுழுக்கு நாம் ஒவ்வொரு நாளும் அவரோடு கொள்ளும் ஆள் ஆள் உறவை சுட்டிக் காட்டுகின்றது, திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


ஜன.12,2009. நாம் ஒவ்வொரு நாளும் நம் ஆண்டவர் இயேசுவோடு கொள்ளும் ஆள் ஆள் உறவை அவரின் திருமுழுக்கு விழா சுட்டிக் காட்டுவதாய் இருக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இயேசுவின் திருமுழுக்கு விழாவான ஞாயிறன்று சிஸ்டைன் ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தி 13 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு திருவருட்சாதனத்தை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்துமஸ் காலம் நிறைவுறுவதைக் குறிப்பிட்டு, இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற போது தண்ணீரில் மூழ்கியதன் மூலம் அவரை நம்மோடு இணைத்தார் என்றார்.

திருமுழுக்கு, கடவுள் தமக்கும் நமக்குமிடையே கட்டியுள்ள பாலம் போன்று இருக்கின்றது, இந்தப் பாதையின் வழியாக நாம் அவரை அடைய முடிகின்றது, இது நமது நம்பிக்கைக்கு வாயிலாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

அதேசமயம் அந்தப் பாதையைச் சுட்டிக் காட்டும் அடையாளமான திருமுழுக்கு, இறைவனைச் சந்திப்பதற்கும் அவரால் அன்பு செய்யப்படுகிறோம் என்று உணரவும் ஏற்ற மகிழ்ச்சியான வழி என்பதால் அதை உயிரூட்டமுடன் பெற வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்து திருமுழுக்கு நேரம் மற்றும் அந்நாளில் வானகம் திறந்ததிலிருந்து நாமும் பிறக்கின்ற ஒவ்வொரு புதிய குழந்தையையும், தீமையின் இருளான சக்திகளைவிட வல்லமைபடைத்த கடவுளின் கரத்தில் அர்ப்பணிப்போம் என்று திருத்தந்தை மேலும் கூறினார்.

இவ்வாறு நாம் செய்வதன் மூலம் அவரிடமிருந்து வருவதை அவருக்கே கொடுக்கிறோம் என்ற அவர், குழந்தை பெற்றோரின் சொத்து அல்ல, ஆனால் அக் குழந்தை, சுதந்திரமாகவும் புதிய வழியிலும் வளர்வதற்கு பெற்றோரிடம் படைத்தவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் இறைவனின் சுதந்திரக் குழந்தையாக அது வளர அவர்கள் அவருக்கு உதவுகிறார்கள் என்றார்.

பெற்றோர், குழந்தைக்குப் பொறுப்பு அல்லது குழந்தைகளின் ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றி அவைகளுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுப்பது – இவற்றில் அவர்கள் குழந்தைகளை சமநிலையில் நடத்துவதற்கு இத்தகைய சரியான புரிதல் உதவும் என்றார் திருத்தந்தை.

இத்திருவருட்சாதனத்தின் மூலம் புதிதாகத் திருமுழுக்குப் பெற்ற குழந்தை கடவுளின் சுவிகாரப் பிள்ளையாக மாறுகின்றது. மேலும் அது கடவுளைத் தந்தையாக அங்கீகரிப்பதற்கும் பிள்ளைக்குரிய மனநிலையோடு அவரோடு உறவு கொள்வது எப்படி என்று அறிவதற்கும் அக்குழந்தைக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும் திருத்தந்தை திருப்பலியில் மறையுரையாற்றினார்.

மைக்கிள் ஆஞ்சலோவின் அற்புதமான ஓவியங்கள் நிறைந்த இந்த சிஸ்டைன் ஆலயத்தில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருமுழுக்கு பெற்ற 13 குழந்தைகளின் பெற்றோர், தாத்தா பாட்டிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறிய பங்குச் சூழலை உருவாக்கினர்.








All the contents on this site are copyrighted ©.