2009-01-10 16:19:19

மெக்சிகோ ஆறாவது சர்வதேச குடும்ப மாநாட்டை முன்னிட்டு பரிபூரணபலனை வழங்கியுள்ளார் திருத்தந்தை

 


ஜன.10,2009. மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகரில் நடைபெறவுள்ள ஆறாவது சர்வதேச குடும்ப மாநாட்டை முன்னிட்டு அந்நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் விசுவாசிகளுக்கும் அதே ஆன்மீகக் கருத்துக்களுக்காகத் தங்கள் குடும்பங்களில் செபிப்பவர்களுக்குன பரிபூரணபலனை வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

மெக்சிகோ நகரில் ஜனவரி 13 முதல் 18 வரை நடைபெறும் இவ்வுலக மாநாட்டையொட்டி திருத்தந்தை வழங்கும் இந்த ஆன்மீக நலன் பற்றிய ஆணையை அப்போஸ்தலிக்க பாவக்கழுவாய் நிறுவனத் தலைவர் கர்தினால் ஜேம்ஸ் பிரான்சிஸ் ஸ்டாப்போர்டு மற்றும் அதன் செயலர் அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் ஜிரோத்தி வெளியிட்டுள்ளனர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தமக்கு முந்தைய திருத்தந்தையர்களின் மேய்ப்புப்பணி ஆர்வத்தைப் பின்பற்றி, குறிப்பாக நாசரேத்தூர் திருக்குடும்ப பக்தியை அதிகமாகப் பரப்பிய திருத்தந்தையர்கள் 13ம் சிங்கராயர், 15ம் பெனடிக்ட் ஆகியோரைப் பின்பற்றி வருங்காலத் தலைமுறைகளுக்கு நல்ல கிறிஸ்தவக் குடும்பங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் குடும்பம் பற்றிய இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தமது பிரதிநிதியாகத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனையை அனுப்புகிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நல்ல கிறிஸ்தவக் குடும்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாநாட்டிற்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் தனது செய்திகளை வழங்குவார் என்றும் உரைக்கும் அவ்வாணை, எல்லாவற்றிற்கும் மேலாக இம்மாநாட்டை முன்னிட்டு பரிபூரண பலனையும் வழங்கியுள்ளார் என்றும் கூறுகிறது.

இப்பலனை பெற விரும்புவோர், ஒப்புரவு திருவருட்சாதனத்தைப் பெற்று, திருநற்கருணை வாங்கி திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்க வேண்டும், மேலும் மெக்சிகோ மாநாட்டில் பங்கு கொள்ள இயலாத விசுவாசிகள், நினைவாலும் ஆன்மீக உணர்வாலும் அதில் கலந்து கொண்டு கர்த்தர் கற்பித்த செபம் மற்றும் விசுவாச அறிக்கையைச் சொன்னால் அப்பலனைப் பெறலாம். குறிப்பாக வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாகத் திருத்தந்தையின் உரைகளைக் கேட்கும் போது இத்தகைய ஆன்மீக உணர்வுடன் ஒன்றித்திருக்க வேண்டும் என்றும் அவ்வாணை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.