2009-01-10 19:37:34

அரசு இயற்றும் சட்ட திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்த கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்கள் முயற்சிகளை அதிகரிக்குமாறு திருப்பீட அதிகாரி அழைப்பு


ஜன.10,2009. அரசு இயற்றும் சட்டங்கள் மற்றும் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்த கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்கள் முயற்சிகளை அதிகரிக்குமாறு திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

மெக்சிகோ நகரில் தொடங்கவுள்ள ஆறாவது சர்வதேச குடும்ப மாநாடு பற்றி நிருபர்களுக்குப் பேட்டியளித்தத் திருப்பீட குடும்ப அவையின் தலைவர் கர்தினால் என்னியோ அந்தோனெல்லி, அரசின் தீர்மானங்களில், குறிப்பாக பொருளாதாரம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், குடியிருப்பு வசதிகள் போன்றவற்றிலான அரசின் தீர்மானங்களில் குடும்பங்கள் தங்கள் குரல்களை உயர்த்துமாறு கேட்டுள்ளார்.

நாட்டின் கொள்கைகள் குடும்பங்களுக்காக மட்டுமல்லாமல் குடும்பங்களோடும் சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற கர்தினால் அந்தோனெல்லி, குடும்பங்கள் சார்ந்த சட்டதிட்டங்கள், அவற்றின் தேவைகள் மற்றும் ஆவலை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்றார்.

ஒரு நல்ல தேசிய மற்றும் ஆன்மீக வாழ்வுக்கு அத்தியாவசியமான மதிப்பீடுகள் குடும்பத்திற்குள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறிய அவர், விசுவாசமும் மதிப்பீடுகளும் குடும்பத்திற்குள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.