2009-01-06 15:06:12

திருக்காட்சி விழா நாளில் திருத்தந்தையின் மூவேளை செப உரை . 060109.


அன்புள்ள சகோதர , சகோதரிகளே என பாசத்தோடு வாழ்த்துக்கூறிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் நாம் இன்று திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம் என்றார் . நற்செய்தியாளர்கள் இயேசு எவ்வாறு தாழ்ச்சியோடும் , மறைவாகவும் மண்ணில் உதித்தார் எனக்கூறுகின்றனர் . யூதர்களின் ராஜாவாகப் பிறந்துள்ள இயேசுவைத் தரிசித்து தங்கள் பரிசுகளைக் கொடுக்க கிழக்கிலிருந்து ஞானிகள் வந்ததாகக் கூறுகிறார் திருத்தூதர் மத்தேயு . நாம் இந்நிகழ்ச்சியைக் கேட்கும் ஒவ்வொருமுறையும் ஞானிகளின் உள்ளப்பாங்கையும் , ஏரோது , யூதர்களின் உளப்பாங்கையும் தெளிவாகக் காண்கிறோம் . ஏரோது மன்னன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கேள்வியுற்றதும் உள்ளம் கலங்கினான் . அவனோடு எருசலேமும் கலங்கிற்று எனக் கூறுகிறார் திருத்தூதர் மத்தேயு. ஏரோது மன்னன் அவனுக்கும் அவன் குழந்தைகளுக்கும் போட்டிக்கு ஒரு மன்னன் பிறந்துள்ளதாகக் கருதினான் . எருசலேம் நகரத்து மக்களோ மந்தப்புத்தியோடு இருப்பதைக் காண்கிறோம் . அவர்கள் இந்த அபூர்வப்பிறப்புப் பற்றிச் சரியாகச் சிந்திக்கவில்லை . எசாயா இறைவாக்கினர் முன்னரே ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார் . ஒரு ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் என அறிவித்திருந்தார் . ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மீது இருக்கும் . அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர் , வலிமைமிகு இறைவன் , என்றுமுள்ள தந்தை , அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும் . திருநூலைத் தெரிந்திருந்த தலைமைக்குருக்கள் இயேசுவை ஏற்க மறுத்தார்கள் . திருநூலை படித்திருப்பதால் ஏசுவை தம் வாழ்வில் மனிதர் ஏற்றுக் கொள்வர் எனக்கூறமுடியாது . தம்முடைய துயரங்களுக்கு முன்னதாக எருசலேம் நகர் தம்மைப் புரிந்து கொள்ளாததை நினைத்து இயேசு அழுதார் . கடவுளையே இவ்வுலகம் ஏற்க மறுத்ததை நாம் காண்கிறோம். இயேசு யூதர்களின் அரசர். இரக்கமும் பிரமாணிக்கமும் உள்ளவர் . நம்மை தீய வழிகளிலிருந்து மனம் மாறி நல்வழியில் செல்ல அழைக்கிறார், எனத் திருத்தந்தை மூவேளை செப உரை வழங்கினார் . இயேசுவை வரவேற்ற மரியாவைப் போன்று நாமும் விசுவாசத்தோடு கிறிஸ்துவை வரவேற்று நற்செய்திக்கு செவிமடுத்து வாழ்வோம் எனக்கூறி வந்திருந்த அனைவருக்கும் தம் அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.