2009-01-05 14:56:27

திருத்தந்தை-திருத்தூதர் யோவான் மனுவுரு எடுத்த இறைவார்த்தைக்குச் சான்றாக இருந்தார்


ஜன.05,2009. திருத்தூதர் யோவான் மனுவுரு எடுத்த இறைவார்த்தைக்குச் சான்றாக இருந்தார் என்று ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான யோவான் நற்செய்தியின் முன்னுரைப் பாடல் பற்றி விளக்கிய திருத்தந்தை, முழு கிறிஸ்தவ விசுவாசத்தின் இரத்தின சுருக்கமாக அமைந்துள்ள இப்பகுதி, யோவான் வாழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு என்றும் இது சொல்லாற்றல்மிக்க ஒருவரால் எழுதப்பட்டது என்று மட்டுமே நோக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.

இது, ஒரு யூத சமயக் குருவின் அல்லது திருச்சட்ட வல்லுனரின் வார்த்தை அல்ல, மாறாக இது ஒரு பணிவுள்ள மீனவரின் சான்று, மேலும்இளைஞனாக நாசரேத்து இயேசுவால் கவரப்பட்ட, அவரோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த, இயேசுவால் அன்புசெய்யப்பட்டவர் என்று தன்னையே அழைத்துக் கொண்டவரின், மற்றும் சிலுவையில் அவர் இறந்ததையும் உயிர்த்த பின் அவரைப் பார்த்தவரின், பின்னர் மற்ற சீடர்களோடு இயேசுவின் தூய ஆவியைப் பெற்றவரால் எழுதப்பட்டது என்றார் திருத்தந்தை.

யோவான் தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை அவரது இதயத்தில் இருத்தி தியானித்தன் விளைவாக இயேசு மனித உரு எடுத்த இறைவார்த்தை என்று உறுதிப்பாட்டுடன் கூறினார் என்றும் திருத்தந்தை விளக்கினார்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனது இருப்பின் ஆழமான பொருளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், இதற்கு புத்தகங்களோ, ஏன் திருமறை நூல்களோ போதாது, மாறாக பெத்லகேம் குழந்தை நமக்கு இதனை வெளிப்படுத்துகிறார், நம்மை அன்பு செய்கின்ற மற்றும் நம்மைக் கைவிடாத, ஏன் மரண நேரத்திலும் கைவிடாத நல்ல மற்றும் பிரமாணிக்கமான இறைவனின் உண்மையான முகத்தை நமக்குக் காட்டுகிறார் என்றார்.

இறைவார்த்தை மனுஉரு எடுத்ததைத் தியானிப்பதற்கு முதலில் தமது இதயத்தைத் திறந்தவர் அன்னை மரியா என்றும் திருத்தூதர் யோவான் போல நாம் ஒவ்வொரும் அவரை நம் இல்லத்தில் வரவேற்போம் என்றும் மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.