2009-01-05 14:57:25

காஸா பகுதியில் மோதல்கள் நிறுத்தப்பட திருத்தந்தை அழைப்பு


ஜன.05,2009. காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகிய அதேவேளை, போரும் வெறுப்புணர்வும் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையே இடம் பெறும் கடும் மோதல்கள் குறித்து இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் மூன்றாவது மூறையாக ஞாயிறன்று பேசிய திருத்தந்தை, உரையாடலைப் புறக்கணிப்பது, வெறுப்பு மற்றும் சண்டைக்கு மீண்டும் பலியாகும் அப்பாவி மக்கள் மீது விவரிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல்களுக்கு எவ்வாறு இட்டுச் செல்கின்றன என்பதை காஸாவிலிருந்து வரும் போர் குறித்த செய்திகள் வெளிக்கொணர்கின்றன என்று கூறினார்.

காஸாவில் மோதல்கள் நிறுத்தப்படவும் புனித பூமியில் நீதியும் அமைதியும் இடம் பெறவும் ஞாயிறன்று செபித்த எருசலேம் பிதாப்பிதாக்கள் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களுடன் தானும் இணைந்து செபிப்பதாகக்கூறி விசுவாசிகள் அனைவரும் இதே கருத்துக்காகச் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார்.

அப்பகுதி கிறிஸ்தவத் தலைவர்கள் சொல்வது போல், இத்தாக்குதல்களில் பலியானோர், காயமடைந்தோர், இன்னும் பயத்திலும் வேதனையிலும் இதயம் நொந்தும் வாழ்வோர் அனைவருக்கும் இறைவனிடமிருந்து வரும் ஆறுதலும் பொறுமையும் அமைதியும் கிடைக்கச் செபிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவில் பொறுப்புடையவர்களையும், இன்னும் மற்ற அதிகாரிகளையும் மனுவுரு எடுத்த பாலன் இயேசு தூண்டுமாறு செபிக்கவும் திருத்தந்தை வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.