2009-01-01 20:01:24

ஏழையாகப் பிறந்த கடவுளைப் பின்பற்றுக என்கிறார் திருத்தந்தை. 01, ஜனவரி.


அநீதியான ஏழ்மையை நீக்க இயேசுவைப் பின்பற்றுக என்று திருத்தந்தை புத்தாண்டின் தொடக்கத் திருப்பலியில் மொழிந்தார் . அவரது உலக அமைதிக்காக முன்னரே வெளியிடப்பட்ட செய்தியை இப்புத்தாண்டு தினத்தன்று அழுத்தமாகக் கூறினார் . நம்முடைய மனித மாண்புக்கு எதிரான வறுமையை கடவுள் விரும்புவதில்லை . அது நீதிக்கு எதிரானது . சமுதாயத்தில் அமைதியான வாழ்வைக் குலைக்கிறது என்றார் .அமைதிக்கு நற்செய்தி காட்டும் வழி நடுநிலையுள்ள நிதானப் போக்கும் ஒருமைப்பாடும் எனத் திருத்தந்தை கூறினார். இது ஆன்மீகப் புரட்சியால் வரவேண்டும் . கொள்கையின் அடிப்படையில் உண்டாகும் புரட்சி அல்ல என்றார் . இது நடைமுறைக்கு அப்பாற்பட்ட கனவுலகக் காட்சியல்ல . நிஜமாக நடக்கக்கூடியது . இந்த ஆன்மீகப்புரட்சி மக்களை எழுச்சியோடு செயல்விரைவுக்குத் தூண்டக்கூடியது என மேலும் உரைத்தார் திருத்தந்தை . காஜாப் பகுதியில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக இஸ்ராயேலும் , பாலஸ்தீன நாடும் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். புத்தாண்டு தினக் காலைத் திருப்பலியில் அன்னை மரியாள் கடவுளின் தாயென்று போற்றும் விழாவும் , உலக அமைதி நாளும் , இயேசு , மீட்பர் எனும் பொருள்பொதிந்த அந்த மந்திர நாமத்தை இயேசு பாலனுக்குச் சூட்டிய திருநாளும் பூத்துச் சிரித்து புதுப் பொலிவோடு மலர்ந்திருக்கும் 2009 ஆம் ஆண்டை ஆண்டவருடைய அன்பளிப்பாக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு வரவேற்கவும் எடுக்கப்பட்ட மாபெரும் விழா நாள் . திருத்தந்தை புத்தாண்டு தினம் மற்றும் மரியன்னை கடவுளின் தாய் என்ற சிறப்புத் திருப்பலியை வத்திக்கான் திருப்பீட நீதி மற்றும் அமைதி ஆணையகத்தின் தலைவர் கர்தினால் ரெனாட்டோ இரபயேல் மார்ட்டீனோவுடனும் , வத்திக்கான் நாட்டின் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனேயுடனும் , மேதகு பெர்னான்டோ பிலோனி , மேதகு தோமினிக் மாம்பர்ட்டி , மேதகு ஜியாம் பவுலோ கிரேபால்டி இவர்களோடும் பல கர்தினால்கள் , ஆயர்கள் , குருக்கள் , ஆயிரக்கணக்கான மக்களோடும் இணைந்து நிகழ்த்தினார் . தமது 42 ஆவது உலக அமைதி தினத்தி்ன் மையக்கருத்தாக அமைதியை நிலைநாட்ட ஏழ்மையை நீக்குவோம் எனத் திருத்தந்தை அறைகூவல் விடுத்தார் .








All the contents on this site are copyrighted ©.