2008-12-31 18:14:08

புத்தாண்டின் முந்தைய மாலை வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை.3112


இவ்வாண்டு முடிவுக்கு வருகிறது . தொடுவானில் அன்னை மரியாளின் ஆசியுறு பார்வை தெரிகிறது . அன்னை மரியாளின் அருள் பிரசன்னத்தை நாம் குடிலில் காண்கிறோம் . இயேசுப் பாலகன் ஆசிமழை வழங்கும் காட்சியை அருகிருக்கும் குடிலில் காண்கிறோம் எனத் திருத்தந்தை தமது மறையுரையைத் தொடங்கினார். அன்னை மரியாளைக் கடவுளின் தாய் என்று அழைத்து நாம் புத்தாண்டின் தொடக்க நாளில் விழா எடுக்கிறோம் .



என்னதொரு பரிமாற்றம் . உலகினை உருவாக்கிய தேவன் உடலோடும் ஆன்மாவோடும் கன்னியின் மைந்தனாகப் பிறந்துள்ளார் . தம் கன்னிமை குன்றாமலே ஆண்டவர் இயேசுவைக் கருத்தரித்திருக்கிறார் மரியாள் . திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடலில் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார் எனக் கூறுகிறார் . கலாத்தியர் மடல் 4, 4-5 .



மாலை வழிபாட்டில் நாம் கடவுளுக்கு நன்றிக் கீதம் பாடும்போது ஓ கிறிஸ்துவே நீர் கன்னிமாதாவின் வயிற்றில் மனித மீட்புக்காகப் பிறந்துள்ளீர் எனப் பாடுகிறோம் . தம் உள்ளத்திலும் உடலிலும் இறைவார்த்தையை வரவேற்ற அன்னையின் மீது நம் கண்கள் இன்று மாலை திரும்புகின்றன எனத் திருத்தந்தை மறையுரையைத் தொடர்ந்தார் . இந்த ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் நமக்கு ஆண்டவர் அளித்த அன்புக் கொடைகளுக்காக நாம் அன்னை மரியாளின் கரங்களில் நம் நன்றிப் பாக்களைச் சமர்ப்பிக்கிறோம் . நமக்கு கடவுள் தந்துள்ள காலம் என்னும் கொடைக்காக நாம் நன்றி கூறுவோம் . நாம் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்வதற்குக் கிடைத்த அவகாசங்களுக்காக நாம் நன்றி கூறுவோம் எனத் திருத்தந்தை கூறினார் . தூய பேதுரு பசிலிக்காவில் மாலை வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் திருத்தந்தை வாழ்த்துக்கூறினார். தந்தையாகிய கடவுளின் வார்த்தையாகிய இறைமகன் நம்மிடையே வந்து கடவுள் நமக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளார் எனக்காட்டுகிறார் . நம்மோடு தங்கி நமக்குப் பேருதவியாக உள்ளார் . அவர் மனுவாக உருவெடுத்தது மிகப் பெரிய கொடை . அவர் நம் பாதைக்கு விளக்காக வந்துள்ளார் . நம் வாழ்வுக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டும் . இந்தக் கொடையாகிய இயேசுவை நாம் எல்லோருடனும் பகிர்ந்துகொள்வோம் எனத் திருத்தந்தை தம் மறையுரையில் தொடர்ந்தார் . உரோமை நகரில் திருச்சபையின் எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதாகத் தெரிவித்தார் . நிலையில்லா எதிர்காலத்தில் நாம் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வாழவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் . குழந்தைகளையும் , இளையோரையும் நினைவு கூர்ந்து செபித்தார் . சமூக , பொருளாதார வீழ்ச்சி இந்த ஆண்டை முடிவுக்குக் கொண்டுவருகிறது . வாழ்வில் துன்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் உதவவேண்டும் என அழைப்பு விடுத்தார் . 2008 ஆம் ஆண்டை நாம் விடுத்து 2009 ஆம் ஆண்டை அன்னை மரியாளின் துணையோடு துணிவோடு எதிர்கொள்வோம் எனக்கூறி , இந்த நம்பிக்கையோடு நாம் இறைவா நீரே எமது நம்பிக்கை .நாங்கள் குழப்பத்தில் வீழாது பாதுகாத்தருளும் . இன்றும் எந்நாளும் நீரே எமது நம்பிக்கையாக உள்ளீர் எனத் தேதேயும் என்ற இறை நன்றிப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி தம் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.