2008-12-30 15:16:12

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தாங்கள் எதிர்பார்த்த நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாக அம்மாநில தலத்திருச்சபை அதிகாரிகள் தெரிவித்தனர்


டிச.30,2008. இந்தியாவின் வடக்கு மாநிலமான ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் தாங்கள் எதிர்பார்த்த நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாக அம்மாநில தலத்திருச்சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்துப் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆயர் பீட்டர் எலாம்பாச்சேரி, அம்மாநில புதிய அரசு அங்கு இடம் பெறும் பிரிவினைவாதப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார்.

87 உறுபிபனர்கள் கொண்ட சட்டசபை தேர்தலில் தேசிய அவை கட்சி 28 இடங்களிலும் மக்கள் ஜனநாயக கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே தேசிய அவை கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசு, ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கும் என்று நம்புவதாகவும் ஆயர் எலாம்பாச்சேரி கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படைக்கும் பிரிவினைவாதப் பிரிவுக்கும் இடையே 1989ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் மோதல்களில் குறைந்தது அறுபதாயிரம் பேர் இறந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் வேறு இடங்களிலிருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு புதிய அரசு ஆவன செய்யவும் கேட்டுள்ளார் ஆயர் எலாம்பாச்சேரி.

ஜம்மு காஷ்மீரின் 22 மாவட்டங்களில் ஆறில் மட்டுமே திருச்சபை பணி செய்வதாகவும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.