2008-12-30 15:17:00

காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகள் கூறுகின்றனர்


டிச.30,2008. மத்திய கிழக்குப் பகுதியின் காஸாவில் இடம் பெற்று வரும் தொடர் குண்டுமழை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகள் அறிவித்தனர்.

காஸா பகுதியின் நிலைமை மிகவும் துயர் நிறைந்ததாக இருக்கும் வேளை பலர் தங்கள் கைகளை அல்லது கால்களை இழந்துள்ளனர், அவர்கள் இஸ்ரேலுக்கோ, எகிப்துக்கோ அல்லது ஜோர்டனுக்கோ போக முடியாமலும் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமலும் இருக்கின்றனர் என்று எருசலேம் காரித்தாஸ் பொதுச் செயலர் க்ளவ்தெத் ஹபேஷ் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசிக்கொண்டிருக்கின்றன, காஸா மருத்துவமனையில் 1500 படுக்கைகளே இருப்பதால் இம்மோதல்களில் காயமடைந்தவர்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்க முடியாமல் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வரும் தாக்குதலகளில் இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.