2008-12-29 14:52:18

புனித பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி - புனித பவுலின் சிந்தனையில் விடுதலை


அந்த ஆசிரமத்திற்குள் கடந்த சில நாட்களாக எல்லாத் துறவிகளும் பரபரப்புடன் காணப்பட்டனர். அங்குமிங்கும் ஓடி முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். ஒரு துறவி திடீர் திடீரென்று காணாமல் போய்விடுவதே அதற்கு காரணம். அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் இவர் காணாமல் போய்விடுகின்றார். எங்கே போகிறார்? என்ன செய்கிறார்?'' என்று காரசாரமான விவாதம் மற்ற துறவிகளுக்குள் நடந்தது. ``இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதுபோன்ற தவறான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று ஒருவருக்கொருவர் சொன்னார்கள். உடனே, அந்தத் துறவியின் அறைக் கதவு உடைக்கப்பட்டது. அறையின் முகப்பிலே கட்டிலுக்கு அருகில் ஒரு வாளியில் இரண்டு சேலைகள் நீரில் ஊற வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்ததும்... ``நாம் சந்தேகப்பட்டது சரியாய்ப் போய்விட்டது. இது சரியான ஆதாரம்'' என்று இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தூரத்தில் அந்தத் துறவி வந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்ட ஒருவர், ``அதோ அவர் வருகிறார் பாருங்கள்'' என்று சத்தமிட்டார். ஆசிரமம் நோக்கி வந்துகொண்டிருந்த துறவி, ஏதோ ஒரு ஞாபகம் வந்தவரைப் போல் நின்று, திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தார். அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க மற்றவர்களும் பூனைபோல பின் தொடர்ந்தார்கள். துறவி ஊருக்கு வெளியே இருந்த அந்தத் தனி குடிசைக்குள் சென்றார். அவர் பின்னாலேயே பதுங்கிப் பதுங்கிச் சென்ற இவர்களும் ஜன்னலைத் திறந்து பார்த்தார்கள். உள்ளே நடந்த காட்சியைப் பார்த்த இவர்கள் முகம் இருளடைந்து நின்றார்கள். காரணம்... வீட்டிற்குள்ளே சென்ற துறவி கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரை எழுப்பி, ``மன்னித்துவிடம்மா... ஆஸ்ரமம் வரைக்கும் சென்ற பிறகுதான் உனக்கு இன்று இரவு மருந்து கொடுப்பதற்கு மறந்துவிட்டேன் எனத் தெரிந்தது. இதைச் சாப்பிடு'' என்று மருந்தைக் கொடுத்தார். மருந்து கொடுத்த துறவியைப் பார்த்து, நன்றிமிக்க அந்த அம்மா புன்னகையோடு தன் இரு கரங்களையும் கூப்பி நன்றி சொன்னார்... கொஞ்சம் கூட நகர முடியாத நிலையில் தொழுநோயுற்றிருந்த அந்த நூறு வயதுப் பாட்டி! உளவு பார்க்கச் சென்ற மற்ற துறவிகள் தங்களின் தவறான முடிவை நினைத்துத் தலை கவிழ்ந்தார்கள்.

அன்பர்களே, அந்தத் துறவியைப் பற்றி நல்லவிதமாக யோசிக்க விடாமல், அவர்களைத் தவறான முடிவுக்கு வரவைத்தது எது? சிந்தித்துப் பாருங்கள். மற்ற துறவிகள் எதிலிருந்து விடுதலை பெற வேண்டும்? பொதுவாக விடுதலை என்றவுடன் நமக்கெல்லாம் கைதிகள் விடுதலை, அரசியல் பொருளாதார விடுதலை, பிணையக் கைதிகள் விடுதலை என்று சட்டென்று நமது நினைவுக்கு பல வருகின்றன. ஆனால் உள்மன விடுதலையே உண்மையான விடுதலையாகும். அதாவது பாவத்திலிருந்து, சட்டம் சம்பிரதாயங்களிலிருந்து, தீய சக்திகளிடமிருந்து, ஊனியல்பின் நாட்டங்களிலிருந்து மற்றும் சாவிலிருந்து கிறிஸ்து வழங்கும் பெறும் விடுதலையாகும். புனித பவுலும் இந்த அக விடுதலையையே வலியுறுத்துகிறார்.

முதலில் பாவத்திலிருந்து விடுதலை. கிறிஸ்து தமது மரணத்தால் உலகினர் எல்லாருக்கும் விடுதலை தந்தார் என்பதே பவுலின் திருமடல்கள் எல்லாவற்றிலும் இளையோடிக் கிடக்கின்றது. கிறிஸ்து சிலுவையில் தந்த பலியே மக்களுக்கு விடுதலை தந்தது என்ற கருத்தை பவுல் முன்வைக்கிறார். கிறிஸ்து தமது சிலுவையின் விலையேறப்பட்ட இரத்தத்தால் நம்மை விலைகொடுத்து மீட்டுள்ளார் என்ற கூற்றை அவர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலில் வலியுறுத்துகிறார். எனவே கிறிஸ்துவினால் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள், கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்யும் கருவிகளாய் நம்மை மாற்ற வேண்டும். இரண்டாவதாக, தூய வாழ்வுக்கு வழி அமைக்கும் ஏற்புடைய செயல்களுக்கு நமது உடல் உறுப்புக்களை ஈடுபடுத்த வேண்டும்.

அடுத்து சட்டத்திலிருந்து விடுதலை. அன்று யூதர்கள் திருச்சட்டம் பற்றி சில அசைக்க முடியாத நமபிக்கையைக் கொண்டிருந்தனர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதே இறைவனுக்கு முன்னர் ஏற்புடைய செயல், இதுவே தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் வளமையைக் கொடுக்கும், திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காததால் வரலாற்றில் தங்களுக்கு அழிவு வந்தது என்ற நமபிக்கையை அவர்கள் காலம் காலமாய்க் கொண்டிருந்தனர். எனவே கிறிஸ்தவத்தைத் தழுவிய யூதர்கள் இந்தத் தங்களது பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே பவுல், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் மட்டும் விடுதலை கிடைத்திடாது, மாறாக கிறிஸ்துவின் மீதுள்ள நமபிக்கையே நம்மை விடுதலையாக்கும் என்று வலியுறுத்துகிறார். அவர் கலாத்தியர், 3,22ல் இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது என்கிறார்.

அடுத்து தீய சக்திகளிடமிருந்து விடுதலை. தீய சக்திகள் என்றவுடன் நமக்குப் பல தீய சக்திகள் நினைவுக்கு வரலாம். ஆனால் பவுல் வாழ்ந்த காலத்தில், நாம் வாழும் காலம் பொல்லாத காலம், அக்காலமே தீய சக்தி, அதிலிருந்து கிறிஸ்து நமக்கு விடுதலை தருகின்றார் என்று கலாத்தியர், 1,4ல் எழுதியுள்ளார். இன்னும் பஞ்சபூதங்களும் தீய சக்திகள் என்பது கிரேக்க தத்துவமாகும். ஆதலால் கிரேக்கத் தத்துவ தாக்கம் பெற்றிருந்த பவுல் இந்த பஞ்சபூதங்களிலிருந்தும் விடுதலை தருபவர் இயேசுவே என்கிறார்.

அடுத்து ஊனியல்பிலிருந்து விடுதலை. பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் பிரிவு5, சொற்றொடர் 19,20 மற்றும் 21ல் ஊனியல்பிலின் செயல்கள் என்னவென்று குறிப்பிடுகிறார்.

பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி,20 சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு,21 அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன் என்றும் சொல்கிறார். பவுல் இந்த ஊனியல்பின் செயல்களை நாம் முறியடிக்க, கிறிஸ்து தமது பாடுகளினாலும் உயிர்ப்பினாலும் வலிமை தருகிறார் என்கிறார்.

இறுதியாக பவுல் சொல்வது சாவிலிருந்து விடுதலை. பவுலை பொறுத்தவரை நமது பாவ இயல்பும் நாம் செய்யும் பாவங்களுமே சாவிற்குக் காரணம். ஆதாம் செய்த பாவத்தினால் அவனுக்கும் அவனது வழிமரபினராகிய மானிடருக்கும் சாவு வந்தது. எனினும் மனித உரு எடுத்த கிறிஸ்துவின் நல்ல செயல்களினால் வாழ்வு வந்தது என்று உரோமையருக்கு எழுதிய திருமுகம் பிரிவு 5, 12 முதல் 21 வரையிலான வசனங்களில் விளக்குகிறார். எப்படியெனில் நாம் திருமுழுக்கின் மூலம் இயேசுவின் வாழ்வில் இரண்டறக் கலக்கிறோம். மனிதராய்ப் பிறந்த இயேசு இறந்ததைப் போல் நாமும் இறக்கின்றோம். கிறிஸ்து இறந்து உயிர்த்ததினால் நாமும் அவரைப் போல் உயிர்ப்போம். எனவே கிறிஸ்து நமக்கு தமது உயிர்ப்பிலும் பங்கு தருவார். இனி நம்மை சாவு வெற்றி கொள்ள இயலாது என்கிறார்.

பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் பிரிவு 15, 55ல் சாவு முற்றிலும் ஒழிந்தது: வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?

என்று சாவுக்கு அவர் சவால் விடுவதே இதற்குச் சான்று.

அன்பர்களே, பவுல் சிந்தனையில் உருவான விடுதலைகள் பற்றிக் கேட்டோம் ஆனால் இன்று பரவலாகப் பேசப்படும் சமுதாய விடுதலை பற்றி அவர் பேசவில்லையே என்று நினைக்கலாம். பவுல் தமது திருமுகங்களில் கிறிஸ்து தரும் சமூக விடுதலையைவிட தனிமனித விடுதலையை மையப்படுத்துகிறார். தனிமனித மனமாற்றமே சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும். சமுதாயத்தின் மாற்றம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தனிமனித மனமாற்றம். கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் ஒருவர் பாவம், சட்டம், ஊனியல்பு சாவு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுகிறார்.

2008 ஆம் ஆண்டு வெகு விரைவில் மறைய இருக்கிறது. இவ்வேளையில் பலவிதமான இன்ப துக்க நிகழ்வுகள் நம் செவிகளை எட்டியவண்ணம் இருக்கின்றன. பொதுவாக பிறருடைய குறைகளைக் கண்டுபிடிப்பதிலும் அதனை ஆள்காட்டி விரலால் சுட்டிப் பேசுவதிலும் ஒருவர் காட்டும் ஆர்வம், அவர் தனது குறைகளைக் கண்டுபடிப்பதிலோ அல்லது அவை சுட்டிக்காட்டப்படும் பொழுது அவற்றை ஏற்று திருத்துவதிலோ இருப்பதில்லை. ஒருவரிடம் கண்டுபிடிக்கப்படும் தவறுகள், இன்னொருவரின் தவறுகள் அல்ல. அவை தன்னுடைய தவறுகள். இந்த உண்மை புரிந்தாலே ஒருவர் உயர்வு பெற்று விடலாம். புனித பவுல் மையப்படுத்துவது போல் புதிய ஆண்டில் தனிமனித மனமாற்றத்தில் அக்கறை எடுப்போம். அப்போது குடும்பமும் நாடும் உலகமும் சுபிட்சம் பெறும்.

அது இலையுதிர் காலம். மரம் மொட்டையாக நின்றது. புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின. உன் இலைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. உன்னைப் பார்த்தால் அழவேண்டும் போல் இருக்கின்றது என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது. மரம் சொன்னது- நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்.

நிமிர்ந்தே நின்றது மரம். அது பின்னர் சொன்னது- விழுவதற் கெல்லாம் அழுவதற் கில்லை என்று. இதனைச் சொன்னது ஓர் இலங்கைக் கவிஞன்.

புலரும் 2009ம் ஆண்டில் நம்மில் புதிய தளிர்கள் முளைக்கட்டும்.

 








All the contents on this site are copyrighted ©.