2008-12-29 14:51:46

உலகின் அனைத்துக் குடும்பங்களும் திருக்குடும்பத்திடம் விளங்கிய நற்பண்புகளைக் கடைபிடிக்க திருத்தந்தை அழைப்பு


டிச.29,2008. உலகின் அனைத்துக் குடும்பங்களும் திருக்குடும்பத்திடம் விளங்கிய விசுவாசம், நம்பிக்கை, பிறரன்பு ஆகிய நற்பண்புகளைக் கடைபிடிக்குமாறு ஞாயிறன்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

குடும்பங்கள், இல்லத் திருச்சபைக்கு மாபெரும் விதத்தில் சான்று பகர்வதன் மூலம் அகிலத் திருச்சபை மற்றும் உலகளாவிய சமுதாயத்தின் வாழ்வுக்குச் சான்றாக இருக்கின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்துமஸிக்கு அடுத்து வரும் இஞ்ஞாயிறன்று திருச்சபை நாசரேத்தூர் திருக்குடும்பத்தை மகிழ்வுடன் கொண்டாடுகின்றது என்று சொல்லி, திருச்சபை மற்றும் சமுதாயத்தின் மூலைக்கல்லாக இருக்கும் குடும்பம் பற்றிய தமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

மரியாவும் வளனும் இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணித்த பின்னர் குழந்தையை நாசரேத்துக்கு எடுத்துச் சென்று குடும்பமாகத் தங்கள் வாழ்வை எவ்வாறு தொடங்கினர் என்பதை இந்நாளில் சிந்திக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இன்னும் ஸ்பெயினின் மத்ரித்தில் வருகிற ஜனவர் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ள சர்வதேச குடும்ப மாநாடு பற்றியும் ஸ்பானிய மொழியில் பேசிய திருத்தந்தை, மத்ரித்தில் ஒளி-ஒலி காட்சி மூலம் திருத்தந்தையின் உரையைக் கேட்பதற்குக் காத்திருந்த மக்களுக்குத் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஒவ்வோர் இல்லத்தையும் இணைக்கும் அன்புக்கும் வாழ்வை ஆதரிப்பதற்கும் எப்பொழுதும் திறந்த மனதாய் இருக்குமாறும் குடும்பங்களுக்கு அழைப்புவிடுத்தார் அவர்.

மேலும் தென் இத்தாலியின் தரந்தோவில் இல்வா தொழிற்சாலையில் 1968ம் ஆண்டு பாப்பிறை ஆறாம் பவுல் தொழிற்சாலை ஊழியர்களோடு கிறிஸ்துமஸ் திருப்பலி நிகழ்த்தியதையும் மூவேளை செப உரையின் இறுதியில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இன்றைய நவீன சமுதாயத்தில் குடும்ப வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் விவகாரங்களில் ஒன்றான வேலையில் பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்புகளில் அதிகரித்துவரும் நிலையற்ற தன்மை ஆகியவைகளையும் குறிப்பிட்டு உலகில் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் மாண்புடன்கூடிய வேலைகள் அமையுமாறு கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.