2008-12-26 14:00:44

புனித பூமிக்கு அமைதி தேவை, எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா கூறுகிறார்


டிச.26,2008 புனித பூமிக்கு, போர்களோ உயர் பாதுகாப்புச் சுவர்களோ இல்லாத நிலையான தீர்வு தேவைப்படுகின்றது, இந்தத் தீர்வு அமைதியே என்று எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பேராயர் ப்போவாட் த்வால் கூறினார்.

பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவுப் பெருவிழா திருப்பலி நிகழ்த்திய பேராயர் த்வால், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் பெத்லகேமைத் தமது இல்லமாகவும், மனிதரைச் சந்திக்கும் இடமாகவும் தேர்ந்து கொண்டார் என்றும் கூறினார்.

உண்மையில் இந்தப் பெத்லகேமில் கிறிஸ்து பிறந்தார், இங்கு வானதூதர்கள் உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக என்று பாடினர், உங்களுக்காக இன்று மீட்பர் பிறந்துள்ளார் என்று அறிவித்தனர் என்றார் பிதாப்பிதா.

இதுவே நமது மகிழ்ச்சிக்கான காரணம் என்ற அவர், இந்த இரவில் பெத்லகேம் குகையின் மௌனம் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் சப்தத்தைவிட அதிகமானது, இந்த குகையின் மௌனம், கண்ணீரால் துன்புறுவோருக்கும் அமைதியிலும் செயலற்ற நிலையிலும் அடைக்கலம் தேடுவோருக்கும் வாழ்வு கொடுக்கின்றது என்றார்.

அமைதி, இறையன்பு, ஒப்புரவு ஆகியவற்றின் நகரமான பெத்லகேம், அமைதி அனைவருக்குமான உரிமை என்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் பிதாப்பிதா த்வால் கூறினார்.

இதுவே மோதல்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்குமான தீர்வு என்றும், சண்டை அமைதியைப் பிறப்பிக்காது, சிறைகள் நிலையான தன்மைக்கு உறுதிவழங்காது என்றும் அவர் கூறினார்.

பிதாப்பிதா மேலும் தமது மறையுரையில், உயரமான சுவர்கள் பாதுகாப்புக்கு உறுதி வழங்காது, வம்புச் சண்டைக்காரரும் வலியச் சண்டை போடுவோரும் அமைதியை சுவைக்க முடியாது, அமைதி கடவுளின் கொடை, அவ்வமைதியை அவர் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.