2008-12-26 14:00:20

கிறிஸ்துமஸ் பெருவிழாவின் மகிழ்வையும் நல்அமைதியையும் வாழ்வில் பொதிந்து வைக்க திருத்தந்தை அழைப்பு


டிச.26.2008. துன்பம் வாழ்வின் ஓர் அங்கம் என்றிருக்கின்ற போதிலும் தாமே வரலாற்றில் நுழைந்த கடவுள் துன்பம் வழியாக நம்மைக் காப்பாற்றும் வல்லமையைக் கொண்டுள்ளார் என்றஉ புனித ஸ்டீபனின் விழா நமக்கு நினைவுடுத்துகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

முடியப்பர் எனப்படும் புனித ஸ்டீபனின் விழாவான இன்று நண்பகல் மூவேளை செப உரை ஆற்றிய திருத்தந்தை, திருச்சபையின் முதல் மறைசாட்சியான ஸ்டீபன் தைரியமுடன் கிறிஸ்துவை போதித்ததற்காகக் கைது செய்யப்பட்டு கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றார்.

இவருடைய மறைசாட்சிய நிகழ்வில், சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள் என்ற கூற்றை புனித பவுல் ஆண்டில் நினைவுகூருகிறோம் என்றார் அவர்.

புனித ஸ்டீபன் கல்லால் எறியப்பட்ட போது அதற்கு ஒத்துழைத்த, அவர் பகைவர்களை மன்னித்து இறந்த நிலையை பார்த்த பவுல், இன்னும் திருச்சபையை நசுக்கிய பவுல் தமஸ்கு அனுபவத்திற்குப் பின்னர் அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறியது என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசு திருச்சபையிலும், கிறிஸ்துவின் குரலிலும் ஸ்டீபன் கொல்லப்பட்ட நிகழ்விலும் அவரின் பரிந்துரையிலும் இறையருள் பவுலின் இதயத்தைத் தொட்டது என்று கூறலாம் என்றார் திருத்தந்தை.

மரணத்தை வாழ்வும், வெறுப்பை அன்பும் இருளை ஒளியும் தவற்றை உண்மையும் வெற்றி கொள்ள கிறிஸ்துவின் பிறப்பு இம்மானுடத்திற்கு வழங்கிய மீட்பின் முதல் பலன்கள் புனித ஸ்டீபனில் உண்மையாயின என்றும் உரைத்த அவர், இன்று பல கிறிஸ்தவர்கள் தீமைக்குப் பதில் தீமை செய்யாமல் அதற்கு உண்மை மற்றும் அன்பினால் பதில் சொல்வதற்கு கடவுளைப் புகழ்வோம் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துமஸ் பெருவிழாவின் மகிழ்வையும் நல்அமைதியையும் வாழ்வில் பொதிந்து வைக்கவும் திருத்தந்தை விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்தார்








All the contents on this site are copyrighted ©.