2008-12-25 19:06:26

அமைதியில்லாத பெத்லகம் பற்றியும் துன்புறும் குழந்தைகள் பற்றியும் சிந்திப்போம் என்கிறார் திருத்தந்தை . 25 , டிசம்பர் .


டிசம்பர் 24 நள்ளிரவுத் திருப்பலியில் மறையுரை நிகழ்த்திய திருத்தந்தை இயேசு பிறந்த மண்ணில் வெறுப்புணர்வும் வன்முறையும் ஓயட்டும் என மொழிந்தார் . பெற்றோரிடமிருந்து அன்பைப் பெறாத குழந்தைகள் , தெருக்களில் தவிக்கும் குழந்தைகள் , போரில் துப்பாக்கி ஏந்தக்கட்டாயப் படுத்தப்படுத்தப்படும் குழந்தைகள் பாலினக் கொடுமைகளுக்காகப் பயன்படுத்தப்படும் குழந்தைகள் ஆகியோரை மனதில் கொள்ளுமாறு திருத்தந்தை வலியுறுத்தினார் . குழந்தைகளுக்காக நள்ளிரவுத் திருப்பலியில் சிறப்பாக பரிந்து பேசினார் . கடவுள் உலகினை விண்ணிலிருந்து பார்த்தது மட்டுமல்ல கடவுள் குழந்தையானார் . தன்னையே வலுவிழந்தவராக்கினார் . பிறரைச் சார்ந்திருப்பவராக்கினார் . அன்பைப் பெறவேண்டியவரானார் .

தூய பேதுரு வளாகத்தில் நள்ளிரவு திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை ஒவ்வொரு குழந்தையிலும் நாம் பெத்லகம் குழந்தையின் சில அம்சங்களைப் பார்க்கிறோம் என்றார் . பெற்றோரின் அன்புக்காக ஏங்கும் குழந்தைகளை நினைவி்ல் கொள்வோம் எனத் திருத்தந்தை கோரிக்கை வைத்தார் . குழந்தை இயேசு துன்புறும் குழந்தைகளுக்கு நம்மை உதவிட அழைக்கிறார் என்றார் . பெத்லகெமின் ஒளி ஒவ்வொரு மனித இதயத்தையும் தொடட்டும் என்று திருத்தந்தை வேண்டிக்கொண்டார் . பெத்லகெமில் அமைதி நிலவ மன்றாடுவோம் என வேண்டினார் . வானவர் பாடிய அமைதிக் கீதம் பெத்லகெமில் ஒலிக்கட்டும் . அண்டை நாடுகளெல்லாம் சமரசமாக வாழவேண்டும் எனத் திருத்தந்தை அறைகூவல் விடுத்தார் . உலகைத் தம் கரங்களில் தாங்கிப்பிடிக்கும் கடவுள் குழந்தையாக பிறரை நம்பி வலுவிழந்தவராக மனித உருவில் பிறந்துள்ளார் என்றார் திருத்தந்தை . இடையர்கள் விழித்திருந்து சாமக்காவல் காத்தது போல நாமும் விழித்திருப்போம். விழித்திருப்போருக்கு மீட்பர் பிறந்துள்ளார் என்ற நற்செய்தி வழங்கப்படுகிறது . விழித்திருக்கும் உள்ளம் தான் இந்நற்செய்தியை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள முடியும் என்றார் . விழித்திருக்கும் உள்ளம் துணிவோடு மாட்டுக் கொட்டிலில் குழந்தை வடிவில் இருக்கும் கடவுளைத் தேடிச் செல்லமுடியும் என்றார் . நாமும் விழித்திருக்கும் மக்களாக வாழ வரம் கேட்போம் எனத் திருத்தந்தை முத்தாய்ப்பாக தம் மறையுரையில் வேண்டினார்








All the contents on this site are copyrighted ©.