2008-12-22 16:43:47

நீண்ட குளிர்கால நாட்கள், வானியல், செபம் மற்றும் கலிலேயோ கலிலி பற்றிய திருத்தந்தையின் சிந்தனைகள்


டிச.22,2008. நீண்ட குளிர்கால நாட்கள், வானியல், செபம் மற்றும் கலிலேயோ கலிலி பற்றிய தனது சிந்தனைகளையும் திருத்தந்தை மூவேளை செப உரையில் பகிர்ந்து கொண்டார்.

கலிலேயோ கலிலி தொலைநோக்கு கருவியைக் கண்டுபிடித்ததன் 400ஆம் ஆண்டை முன்னிட்டு 2009ம் ஆண்டு வானியல் ஆண்டு என்று யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பும் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் அறிவித்துள்ளதை நினைவுபடுத்திய திருத்தந்தை, உலகில் அவ்வாண்டின் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கலிலேயோ பற்றிய கடந்த கால முரண்பாடான கருத்துக்கள் குறித்தும் குறிப்பிட்ட அவர், அவரின் அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பாராட்டினார்.

இவ்வறிவியலைக் கற்றுக் கொடுத்த முன்னாள் திருத்தந்தை 2ம் சில்வெஸ்டர், கிரகோரியன் நாட்காட்டி பெயரைக் கொண்ட முன்னாள் திருத்தந்தை 13ம் கிரகரி, சூரிய நிழற்கடிகாரங்களைத் தயாரிக்கத் தெரிந்த திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர் உட்பட பல திருத்தந்தையர்கள் இவ்வறிவியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர் என்றும் அவர் கூறினார்.

எனவே விசுவாசத்திற்கும் அறிவியலுக்கும் இடையே, வானியலுக்கும் விசுவாசத்திற்கும் இடையே நட்புறவு இருக்கின்றது என்ற அவர், திருப்பா ஆசிரியரின் கூற்றுப்படி, வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்தினால், நூற்றாண்டுகளாக பல ஆண் பெண் அறிவியலார் நாம் நன்கு அறிய உதவிய இயற்கையின் விதிமுறைகள் ஆண்டவரின் வேலைகளை நன்றியுடன் தியானிக்க நல்ல தூண்டுதலாக இருக்கின்றன என்றார்.

கலிலேயோவின் பணி பற்றிய அக்காலத்திய திருச்சபையின் கண்டனம் பெருந்துயரம் தருகிற பிழை என்று 1992இல் மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பவுல் கூறினார். பூமி சூரியனைச் சுற்றுகிறது, சுரியந் பூமியை அல்ல என்பதை கலிலேயோ கலிலி தனது அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் விளக்கினார். ஆனால் அன்றைய திருச்சபை இதனை எதிர்த்தது. திருச்சபையின் கூற்றுப்படி பூமி நிலையானது மற்றும் இதுவே அண்டத்தின் மையம். எனவே கலிலேயோவின் கூற்று தப்பறை என்று 1633 இல் சொல்லிக் குறை கூறியது திருச்சபை. கலிலேயோவும் தனது பிற்கால வாழ்வை வீட்டுக் காவலில் செலவழித்தார்







All the contents on this site are copyrighted ©.