2008-12-20 15:58:30

கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்தவர்க்கு மட்டுமன்றி கிறிஸ்தவரல்லாதவர்க்கும் நமபிக்கை மற்றும் அன்பின் செய்தியைக் கொண்டு வருகின்றது - திருப்பீடச் செயலர்


டிச.20,2008. கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்தவர்க்கு மட்டுமன்றி கிறிஸ்தவரல்லாதவர்க்கும் நமபிக்கை மற்றும் அன்பின் செய்தியைக் கொண்டு வருகின்றது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.

உரோம் நகர் சுத்தம் மற்றும் சுற்றச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடிலை நேற்று மாலை ஆசீர்வதித்து உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தையின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு கிறிஸ்துமஸ் மற்றும் கிறிஸ்துமஸ் குடிலின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

எளிமை, பகிர்வு, தோழமை ஆகியவற்றின் அழகைப் பகிர அழைக்கும் சகோதரத்துவம், ஐக்கியம், அன்பு ஆகியவற்றின் பிணைப்பாகவும் கிறிஸ்துமஸ் குடில் இருக்கின்றது என்ற கர்தினால், ஒவ்வொருவரின் வாழ்விலும் சமூகத்திலும் அன்பையும் நல்லிணக்கத்தையும் விதைக்கவும் இது அழைப்புவிடுக்கின்றது என்றார்.

கிறிஸ்துமஸ் காலத்தில் பரிசுப் பொருட்கள் அதிகமாக வழங்கப்படுகின்றன, இவை ஏன், இவை யாருக்கு என்ற கேள்வியை எழுப்பிய அவர், இன்றைய நுகர்வுத்தன்மையும் தன்னல போக்கும் இவ்விழாவின் ஆன்மீக மற்றும் சமயக் கூற்றைப் புதைப்பது போல் தெரிகின்றது என்றார்.

இயேசுவின் பிறப்பு, ஒரு புனையப்பட்ட கதையோ, பாரம்பரியக் கண்டுபிடிப்போ அல்ல, மாறாக, கிறிஸ்துமஸ் குடில், கடவுளின் ஓரே திருமகன் மனித உரு எடுத்த மாபெரும் நிகழ்வை சுட்டிக்காட்டுகிறது என்றும் கர்தினால் பெர்த்தோனே கூறினார்.

இந்நிகழ்வில் உரோம் மறைமாவட்ட இயக்குனர் பேரருட்திரு குவெரினோ தி தோரா, மாநகராட்டசியின் 18வது பிரிவுத் தலைவர் தனியேலெ ஜான்னி, நகரச் சுத்த அமைப்பின் தலைவர் மார்க்கோ தன்னியேலெ எனப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

உலகின் 350 பகுதிகளிலிருந்து வந்த 1900 கற்கள் மற்றும் பிற பொருட்களால் அமைக்கப்பட்ட இக்கிறிஸ்துமஸ் குடில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனாவில் அமைந்த குடில் போல தத்துவரூபமாகக் காட்சியளிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.