2008-12-20 15:58:06

கலை மற்றும் வரலாற்று கலாச்சார ஆய்வுகள் கிறிஸ்தவ மூலவேர்களைக் காண உதவுகின்றன-

திருத்தந்தை


டிச.20,2008. ஒவ்வொரு மனிதன் மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வுக்கு மனித இயல், நன்னெறி மற்றும் ஆன்மீகக் கூறுகளுக்குத் திறந்ததொரு கலாச்சாரம் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

கிறிஸ்தவ தொல்பொருள் ஆய்வு பாப்பிறை நிறுவனத்தின் ஏறத்தாழ 90 மாணவர்களை இன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கடந்தகாலக் கிறிஸ்தவப் பாரம்பரியத்தைப் பின்பற்றி மாறாத கிறிஸ்துவின் நற்செய்தியை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வோர் இடத்திலும் ஒலிக்கச் செய்யுமாறு வலியுறுத்தினார்.

இக்காலத்தில் பல்வேறு துறைகளில் பரவி வரும் கலை மற்றும் வரலாற்று கலாச்சார ஆய்வுகள், மனிதன் தனது உண்மையான மூலத்தைக் கண்டுணர்ந்து உண்மையான மனிதக் கூறுகளைக் கொண்ட சமுதாயத்தைச் சமைப்பதற்கு உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.

இம்மாணவர்களின் தொல்பொருள் ஆய்வுகள் இந்த நித்திய நகரமான உரோம் கொண்டுள்ள மேற்கத்திய பண்பாடு, கத்தோலிக்க ஆன்மீகம், கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவரும் அறிய உதவுகின்றன என்பதால் இவர்கள் தங்கள் பணியைத் திறம்படத் தொடர்ந்து செய்யவும் திருத்தந்தை ஊக்கப்படுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.