2008-12-18 15:12:52

டிசம்பர் 19 - திருவருகைக்காலச் சிந்தனை


இன்றைய திருப்பலி திருவாசகங்கள் சிம்சோன், திருமுழுக்கு யோவான் ஆகிய இருவரின் பிறப்புப் பற்றிச் சொல்கின்றன. ஆண்டவரின் ஆசீர் பெற்றிருந்த சிம்சோன், இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவித்த மாவீரர். திருமுழுக்கு யோவான் உலக மீட்பராம் இயேசுவின் வழியைத் தயார் செய்ய கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர். மலடியாய் இருந்த சிம்சோனின் தாயும், கருவுற இயலாதிருந்த திருமுழுக்கு யோவானின் தாயும் கடவுளின் அருளால் குழந்தைப் பேறு பெற்றனர். நம்பிக்கையோடு பக்தியில் மூழ்கிய இவர்கள் இறைவனின் பெருங்கருணையால் நல்வாழ்வு பெற்றார்கள். முழுமனத்தோடு இறைவனை நம்பிய இவர்களின் துன்பத்தையும் இகழ்ச்சியையும் மகிழ்ச்சியாக மாற்றி சமுதாயத்தில் முன்னிலும் மிகுந்த நன்மதிப்பு பெறச் செய்தார் இறைவன். மூவுலகையும் ஆளும் இறைவன் தம் வியப்புமிகு செயல் திட்டங்களுக்கு எளியோரைக் கருவியாகப் பயன்படுத்துகிறார். இன்றும் நமது வாழ்வுச் சூழல்களில் வல்லவரான இறைவன் செயல்படும் விதத்தை உணர நம்மில் எளிய உள்ளம் தேவை. கலில் இப்ரான் சொல்வது போல பூவைப் போன்று இருந்து முகத்தை இயேசுவாம் கதிரவன் பக்கம் திருப்புவோம்.








All the contents on this site are copyrighted ©.