2008-12-12 16:33:49

தாய்வான் கத்தோலிக்கர் சீனக் கத்தோலிக்கரோடு ஆன்மீக ரீதியில் தொடர்ந்து ஒன்றித்திருக்க திருத்தந்தை அழைப்பு


12டிச.,2008. தாய்வான் கத்தோலிக்க சமூகம், பெரிய சீனக் கத்தோலிக்கக் குடும்பத்தின் ஓர் அங்கம் என்ற வகையில் சீனக் கத்தோலிக்கரோடு தாய்வான் கத்தோலிக்கர் ஆன்மீக ரீதியில் தொடர்ந்து ஒன்றித்திருக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவை முன்னிட்டு தாய்வானின் எட்டு ஆயர்களை இன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தான் தொடர்ந்து செபத்து வரும் சீனக் கத்தோலிக்கர் தாய்வான் ஆயர்களின் அன்பு அக்கறையில் எப்பொழுதும் இருக்குமாறும் கூறினார்.

தாய்வானில் கத்தோலிக்க விசுவாசம் விதைக்கப்பட்டதன் 150ஆம் ஆண்டைக் கொண்டாடும் அத்தலத்திருச்சபை, குருக்களை உருவாக்குதல், வேதியர்களைத் தயாரித்தல், குடியேற்றதாரர்களை ஏற்றுக் கொள்ளுதல் போன்வற்றில் கவனம் செலுத்தவும் அவர் கேட்டுக் கொண்டார்.

சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும் குடும்பம் முதலும் முக்கியமும் ஆனது என்பதால் ஆயர்கள் தங்கள் மேய்ப்புப்பணியில் குடும்ப வாழ்வைப் பேணிக்காப்பதற்கு முன்னுரிமை கொடுக்குமாறும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

தம்பதியர் திருமணத்தின் பிளவுபடாத் தன்மையைக் காக்கவும் தாய்வானின் சட்டங்களிலும் கொள்கைகளிலும் திருமணத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படவும் ஆயர்கள் கவனமாய் இருக்குமாறும் அவர் கூறினார்.

விசுவாசமுள்ள கத்தோலிக்கராகவும், நல்ல குடிமகனாகவும் இருப்பதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் திருத்தந்தை தாய்வானின் எட்டு ஆயர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.