2008-12-12 16:34:51

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் மனித மாண்புக்கு ஒரு புதிய இடத்தைத் தருகின்றது - திருப்பீடச் செயலர்


12டிச.,2008. சர்வதேச மனித உரிமைகள் சாசனம் ஓர் அறிவிப்பு என்பதைவிட அது மனித மாண்புக்கு ஒரு புதிய இடத்தையும் மனித மாண்பு மீது மேலும் அக்கறை கொள்ளச் செய்வதாகவும் இருக்கின்றது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் வெளியிடப்பட்டதன் அறுபதாம் ஆண்டு கடந்த புதனன்று சிறப்பிக்கப்பட்ட போது உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, சர்வாதிகாரம் சர்வ கோலோட்சிய கட்டத்தில், 1948ல் இச்சானம் அறிக்கையிடப்பட்ட போது, அது மனிதனை நாட்டின் சிலைவழிபாட்டிலிருந்து பாதுகாத்தது என்றார்.

இச்சாசனம் மனிதக் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களின் இன்றியமையாத மாண்பையும் அவர்களின் அடிப்படை மற்றும் சம உரிமைகளையும் அங்கீகரித்து சதந்திரத்துக்கும், நீதிக்கும், அமைதிக்கும் அடித்தளமிட்டது என்றும் கர்தினால் கூறினார்.

ஐ.நா.வின் அவ்வறிவிப்பை திருச்சபையானது, காலத்தின் அறிகுறியாகப் பார்த்தது என்றும் உரைத்த அவர், அச்சாசனத்தால் உறுதி செய்யப்பட்ட சமய சுதந்திரத்திற்குத் திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கின்றது என்றார்.

சமய சுதந்திரம் வழிபாட்டுச் சுதந்திரத்தோடு குழப்படி செய்யப்படும் ஆபத்தை எதிர் நோக்குகிறது என்றும் உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, உரிமைகளும் அதற்கான அடிப்படை காரணங்களும் எப்பொழுதும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றார்.

 








All the contents on this site are copyrighted ©.