2008-12-12 16:35:03

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனித உரிமைகளுக்கு உறுதி வழங்கப்பட வேண்டும் - ஜப்பானிய ஆயர்கள்


12டிச.,2008. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனித உரிமைகளுக்கு உறுதி வழங்கப்பட வேண்டும் மற்றும் அவன் எதிர் நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜப்பானிய ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தை வெளியிட்டதன் அறுபதாம் ஆண்டை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட ஜப்பானிய ஆயர்கள், உலக அளவில் காணப்படும் சந்தை அடிப்படைவாதத்தைக் குறை கூறிய அதேவேளை, தனிமனிதரும், தொழில் அதிபர்களும் நாடுகளும் தங்கள் சொந்த ஆதாயத்தைப் பின்னுக்குத் தள்ளி ஒவ்வொருவரும் வாழ்வதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொருவரின் மனித உரிமைகளை மதித்தல் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், இரண்டு உலகப் போர்களில் எண்ணற்ற மனித உயிர்கள் காவு வாங்கப்பட்டதைக் கண்முன் நிறுத்தி சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்டது என்றும் கூறியுள்ளனர்.

தற்போதைய புதிய மனித உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ள அவர்கள், பொருளாதார நெருக்கடி, கோடிக்கணக்கான மனிதரின் மாண்பு மீறப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் நிறைவுற்றதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி 1995 ல் ஜப்பானிய ஆயர்கள் இதே மாதிரியான கருத்தைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 








All the contents on this site are copyrighted ©.