2008-12-10 15:59:40

எங்கே நிம்மதி - 10, நவம்பர் ,08.


ஒரு காரியத்தின் முடிவுக்கு முன்னர் நாம் கொடுக்கும் விளக்கங்களைக் காரணங்கள் என்கிறோம் . முடிவுகளைச் செயல்படுத்தாததற்கு நாம் கொடுக்கும் விளக்கம் மழுப்பு வாதமாகும் . காரணங்கள் என்ற பெயருக்கு அருகதை உள்ளவை பொதுவாக நடிப்பற்ற நாணயம் தவறாதவை . மழுப்புதல் என்பது பொதுவாக தன்னுடைய நடத்தையைச் சமாளிப்பதாகும் . காரணம் என்பது கற்பனை அல்லாத மெய்மையாகும் . புற வாய்மையுடையது . மழுப்புதல் என்பது கற்பனையாகப் புனையப்படுவது . பலவீனமான காரணமாகும் .



ஆதாமும் ஏவாளும் விவிலியத்தின் தொடக்க நூலில் காட்டப்படுகின்றனர் . ஆதாம் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டதற்குச் சரியான காரணம் அது புலன்களுக்குச் சுவையூட்டுவதாக இருந்தது .ஆனால் ஆதாம் அதை ஏவாள் கொடுத்ததால் உண்டதாக மழுப்புகிறார் .



நற்செய்தியில் கொடுக்கப்பட்ட உவமையில், பணத்தை புதைத்து வைத்ததற்கான காரணம் அவனுடைய அக்கறையில்லாத மெத்தனப்போக்கும் சோம்பேறித்தனமும் . அவனை நற்செய்தி கெட்ட , சோம்பேறி என வர்ணிக்கிறது . அவன் கொடுக்கும் மழுப்பலான காரணம் தலைவன் கடுமையானவர் என்பதால் முயற்சியில்லாது இருந்ததாகக் கூறுகிறான் . விவிலியத்தில், இருப்பவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படும் என்பதற்குக் காரணம் அவர்கள் முயற்சியுடையவர்கள் . வகுப்பு ஆசிரியர் நேர்மையாக நடங்கள் . முகமூடி வேண்டாம் எனக்கூறினால் , இல்லை , எல்லோரும் முகமூடி அணிகிறார்கள் , நானும் அணிந்துதான் திரிவேன் என்றால் அது விதண்டவாதம் ..



நற்செய்தியில் இயேசுவைப் பின் தொடர அவர் அழைத்தபோது தங்கள் உடைமை மீது கொண்டிருந்த பற்றுக்காரமாகவோ , தங்கள் புகழைப் பரப்ப உதவுபவைகளைப் பற்றிக் கொள்வதன் காரணமாகவோ , அவர்கள் அவரைப் பின் தொடர விரும்பவில்லை . ஆனால் அவர்கள் கொடுத்த காரணங்கள் நிலம் வாங்கியிருப்பதால் கவனிக்க வேண்டும் என்றும் , புதிய எருதுகளை வாங்கியுள்ளதால் அவற்றை வண்டியை இழுக்கப் பழக்க வேண்டும் எனவும் , மணம் முடித்துள்ளதால் தேனிலவுக்குச் செல்ல வேண்டும் எனவும் மழுப்பல் பதில்கள் கொடுக்கப்பட்டன .



அதனால் ஒருவர் பதில் கொடுக்கும்போது அவர் என்ன கூறினார் என்பதைவிட ஏன் கூறினார் என ஆராய்வது மெய்ப்பொருள் காண்பதற்கு வழியாகும் . உளவியல் ரீதியாக அவர் மனதுக்குள் அவர் மறைப்பது என்ன என நாம் ஆராயவேண்டும் . உண்மையான காரணங்கள் வெளிவருவதில்லை . மூடி போட்டுக்கொணடு, உண்மைக்குப்பதிலாக மழுப்புதல் காரணமாக வேறு உடனடி விடைகள் தரப்படுகின்றன . ஆபிரகாம் லிங்கனை ஒரு குடும்பம் பார்க்கச் சென்றது . வழியில் அவர் அழகில்லாதவர் எனப்பேசிக்கொண்டு சென்றார்கள் . அவர்களோடு சென்ற குழந்தை லிங்கனைப்பார்த்ததும் அம்மாவிடம் அம்மா, ஆபிரகாம் லிங்கன் அழகாகத்தானே இருக்கிறார் என்றது . அக்குழந்தை உண்மையைக்கூறுகிறது.



உண்மையை உணர முயலும் ஒருவர்

தமது பகுத்தறிவைச் சரியாகப் பயன்படுத்தி நடுநிலையோடு காரணங்களை ஆராயவேண்டும் . தம்முடைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் , முக்கியமாக ஒருவருடைய அடிமனத்தில் புதைந்திருப்பவை கூறுவதையும் ஒதுக்கிவிட்டு உண்மையை நடுநிலை தவறாது ஆராயவேண்டும். உளவியலார் நமது உதவிக்கு வரலாம் . ஆனால் ஆன்மீக வாழ்விலும் நன்னெறிவாழ்விலும் ஒருவர் மழுப்பும் பழக்கத்தினால் உண்மைக்குத் தடாப்போடலாம்.



ஏன் அந்த இளவரசி மணமகனைக் கைவிட்டுவிட்டாள் எனத் தெரியுமா .

அந்த அழகான இளவரசியும் இளவரசனும் மணமேடையில் திருமண ஒப்பந்தத்துக்காகக் காத்திருந்தனர் . இளவரசன் பேசினான் . உன் அழகான முகமும் , கண்களும், தூய்மையான , மாசில்லாத மொத்த உருவமும் என்னைக் கவர்ந்துள்ளன. நான் உன்னிடம் ஒன்றைக்கூற விரும்புகிறேன். உன்னைப் பார்க்கக் கூட அருகதை அற்றவன் நான் . நான் ஒரு பாவி. குடிப்பழக்கம், சூது , புகைப்பழக்கம் கொண்டவன் நான் என்றான் . இளவரசியோ பரவாயில்லை . திருத்திக் கொள்ளலாம் , என்றாள். இவற்றை நாம் வென்று விடலாம் என்றாள். அவனோ , இவை மட்டுமல்ல , நான் வேறு சில கெட்ட பழக்கமும் உள்ளவன். நான் சொல்லியபடி நடப்பதில்லை . நான் சொல்வது ஒன்று , செய்வது ஒன்றாக இருக்கும் என்றான் . அப்படியென்றால் என்னால் உன்னோடு வாழமுடியாது எனக் கூறிவிட்டு இளவரசி மணமேடையை விட்டு அகன்றுவிட்டாள். மனித வார்த்தைகள் கடவுள் வார்த்தை போலிருக்க வேண்டும் . உண்மையுள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார்.



எல்லா விளக்கும் விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு . குறள் 299.



நம் செருக்கையும் ஐந்தன்புலத்தையும் அடக்க

நமக்கு வழியாக, ஒளியாக , வாழ்வாக வருகிறது இறைவனின் வாக்கு . பொய்யாமை அன்ன புகழில்லை –மழுப்புவதைத் தவிர்ப்போம் . அதுவே நிம்மதிக்கு வழி .








All the contents on this site are copyrighted ©.