2008-12-06 20:12:06

ஞாயிறு மறையுரை டிசம்பர் – 06 .


திருவருகைக்காலத்திலும் கிறிஸ்துமஸ் விழாக்காலத்திலும் நம் வழிபாட்டு நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரமாகிய திருமுழுக்கு யோவான் இன்று சபைக்கு வருகிறார் .

ஒரு கார்ட்டூன் படத்தின் முதல் கட்டத்தில் ஆகார் என்பவரை ஒரு துறவி கையில் விவிலியத்தோடு சந்திக்கிறார் . இருளைப் பழிப்பதைவிட ஒரு விளக்கை ஏற்றுவது நல்லது எனத் துறவி கூறுகிறார் . அடுத்த கட்டத்தில் துறவி மறைந்து விடுகிறார் . – உடனே “நான் இருளைப்பழிப்பதை ரசிக்கிறேன்” என ஆகார் கூறுகிறார் .



நம்மில் பலரும் இருளைப் பழிப்பதை ரசிக்கிறோம் அல்லவா . நம்மில் எத்தனை பேர் நல்லது எவை எனப்பார்ப்பதற்குப் பதிலாக , தவறானவை எவை எனச் சுட்டிக்காட்டத் தயாராக இருக்கிறோம் . நம்மைச் சுற்றி நடப்பவைகளைப் பார்த்து மாற்றம் தேவைப்பட்டால் மாற்றுவதற்குப் பதிலாக , மனம் வருந்துவதோ , குழப்பம் அடைவதோ , கோபப்படுவதோ வழக்கமாக இருக்கிறது . கல்லை எறிந்து பல காரியங்களை விமரிசனம் செய்யத் துடிக்கும் மனம் அக்கற்களைக் கொண்டு நல்லதொன்றை எழுப்புவதில்லையே . சான்றோர் குழப்பம் அடையவோ , கோபப்படவோ தேவை இல்லை அல்லவா ? . நாம் ஒருவேளை அந்த அளவு குணம் என்னும் குன்றேறி நில்லாமல் இருக்கலாம் .



கிறிஸ்துமஸ் விழா வருவதற்கு முன்னர் பலர் பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் . மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலத்தில் கவலையோடு குழப்பத்தோடு இருப்பார்கள் . பலர் கிறிஸ்துமஸ் விழா செலவை உணடாக்குவது எனக்கூறி குழப்பம் அடைவார்கள் .



நம் விசுவாசம் எங்கே போகிறது ? . கடவுள் மனிதனாக நம்மிடையே வந்து இருளின் சக்திகளை வெல்ல வழிகாட்ட வருகிறாரே . இருப்பினும் நாம் இருளைப் பழிக்க வேண்டுமா . ஒரு விளக்கை ஏற்றுவதற்கு மேலாக இருளைப் பழிப்பது சுவையாக இருக்கிறதா . இது ஆண்டவர் இயேசு பிறக்கும் காலம் .நாம் அதற்காக நம் உள்ளக் கோவில்களைத் தயாரிக்க வேண்டும் . மகிழ்ச்சியோடு நாம் கடவுளுக்கு நன்றி கூறவேண்டும் . நம்மைக் காண்பவர்கள் நாம் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுவார்களா . நல்லது நடக்கப்போகிறதே . வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்கிறார் திருமுழுக்கு யோவான் . பாதைகளைச் செம்மையாக்குங்கள் என்கிறார் . காரிருள் மறைந்து ஒளி பிறந்துள்ளது .

அந்தத்துறவி ஆகாரிடம் என்ன சொன்னார் – இருளைப் பழிப்பதைவிட ஒரு விளக்கை ஏற்று என்றார் . நமக்கு ஒரு விளக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடைய வல்ல சக்தி அளப்பரியது .எனவே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?. இருளைப் பழித்துக்கொண்டிருக்கிறோமா ? - நம் உலகில் உள்ள தீய சக்திகளுக்குத் துணையாக நாமும் சேர்ந்து ஒளியை அணைக்க முயல்கிறோமா ? -.

திருவருகைக்காலம் ஆண்டவர் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தும் காலம் . அந்த அமைதியின் மன்னர் நம்மோடுதான் இருக்கிறார் . அவரை வரவேற்க நாம் தயாராக உள்ளோமா ?-.



ஒரு இளந்துறவி நலம் விசாரிக்க ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தார் . அங்கு நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு பாட்டியிடம் உமக்கு ஆண்டவரிடம் என்ன வரம் நாம் கேட்கலாம் என்றார் . நான் முழுக்குணம் அடையவேண்டும் என்றார் அவர் . அந்த இளம் துறவி இது என்ன வம்பாகப் போய்விட்டது . பரவாயில்லை . செபம் செய்வோம் என நம்பிக்கையில்லாமலே செபத்தைச் சொன்னார் . அவர் செபித்துக்கொண்டிருந்தபோதே பாட்டி நலம் பெற ஆரம்பித்தார் . செபத்தை நிறுத்தியபோது முழுமையாகக் குணம் பெற்று எழுந்து பணிவிடை செய்ய ஆரம்பித்தார் . வியப்பில் மூழ்கிய துறவி வெளியே சென்றதும் கடவுளிடம் பேசினார் . ஆண்டவா இனிமேல் இப்படிச் செய்ய வேண்டாம் . நான் விளையாட்டகத்தான் செபம் செய்தேன் எனக் கூறினார் .



கடவுள் பற்றுள்ள பலர் நம்பிக்கையில்லாமல்தான் செபிக்கிறார்கள் . கடவுள் அவர்களுக்காகவும் வருகிறார். கடவுள் என்றும் வாழ்பவர் . அவர் நம் துயர் நீக்க வருகிறார். மகிழ்விக்க வருகிறார். திருமுழுக்கு யோவான் இருளிலிருந்து ஒளிக்கு வருவது எப்படி என நமக்குக் காட்டுகிறார் . மெசியாவாகிய இயேசு நம்மை தந்தையோடு ஒப்புரவாக்க வருகிறார் .நம் நெஞ்சுக்கு நிம்மதியைத் தர வருகிறார்.



1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் கிட்டிகாக் என்ற இடத்திலிருந்து தொலைபேசி வழி அவர்களுடைய சகோதரிக்குச் செய்தி அனுப்பினார்கள் .

நம் விமானம் தரையிலிருந்து 120 அடி உயரத்தில் பறந்து சென்றது . நாங்கள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு வீடு வந்து விடுவோம் என்றது செய்தி . மகிழ்ச்சிப்பெருக்கில் சகோதரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஓடிச் சென்று கொடுத்தார் . அந்தச் செய்தியைப்படித்த நிருபர் ஓ அப்படியா , கிறிஸ்துமஸ் விழாவுக்கு வீடு திரும்புகிறாரா எனக்கேட்டிருக்கிறார் . விமானம் முதன்முதலாகப் பறந்தது என்ற முக்கியமான செய்தியை அவர் கண்டுகொள்ளவில்லை . கிறிஸ்துமஸ் விழாவின்போது இந்த உலகைப்படைத்த ஆண்டவனே வருகிறார் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம்..



ஒரு நபர் தம் நண்பரிடம் கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஒரு அழகான வைர மோதிரத்தை தம் மனைவிக்கு வாங்கியிருப்பதாகக் கூறினார் . நண்பர் – உம் மனைவி கார் வாங்கித்தரச் சொல்லிக்கொண்டிருந்தாரே என்றார் . ஆமாம் , நான் வாங்கிய நகை கவரிங் நகை . கவரிங் காரை எங்கே வாங்குவது என்றாராம் .



நாம் ஆண்டவருக்கு நாம் கவரிங் உள்ளத்தைக் கொடுக்க வேண்டாம் .



இறைவா , எங்கெல்லாம் எங்களுக்கு மாற்றம் தேவையோ , அங்கெல்லாம் நாங்கள் மனமாற்றம் பெற தேவையான அருளைப் பொழிந்தருளும் .








All the contents on this site are copyrighted ©.