2008-12-06 16:21:44

கொத்து வெடிகுண்டுகளைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தில் திருப்பீடம் கையெழுத்து


06டிச.,2008. பல கூறுகளாக வெடித்துச் சிதறும் கொத்து வெடிகுண்டுகளின் தாக்குதல்களுக்குப் பலியாகுவோருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் அக்குண்டுகளைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தில் திருப்பீடம் கையெழுத்திட்டு அதனை நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது.

ஆஸ்லோவில் நடைபெற்ற இச்சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்திடும் இரண்டு நாள் கூட்டத்தில் நாடுகளுக்கு இடையேயான வத்திக்கான் உறவுகள் துறையின் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி கலந்து கொண்டார்.

கொத்து வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவது, அவற்றை சேமித்து வைப்பது ஆகியவற்றைத் தடை செய்யும் இவ்வொப்பந்தத்தில் ஏற்கனவே 94 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இன்னும் முப்பது நாடுகள் இதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கியவுடன் இச்சர்வதேச ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இவ்வொப்பந்தம் நன்கு செயல்படுத்தப்படுவதற்கு எல்லா அரசுகள் மற்றும் அரசு சாரா புரட்சி அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி அந்நிகழ்வில் கூறினார்.

ஐ.நா.வின் கணிப்புப்படி, 34 நாடுகள் 200 வகைகளுக்கும் மேற்பட்ட கொத்து வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளன. தற்சமயம் கோடிக்கணக்கான இக்குண்டுகள் 75 நாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.