2008-12-03 17:58:44

திருத்தந்தையின் மறைபோதகம் – டிசம்பர் , 3 .


இன்று உரோமையில் குளிர் அதிகமாக, மேகமூட்டமாக இருந்தது . இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுலின் அரங்கத்தில் இருந்தது .

திருத்தந்தை வந்திருந்தோரைப் பாசமுடன் வாழ்த்தி, வரவேற்றார் . இன்றும் திருத்தூதர் பவுலின் கருத்துக்கள் பற்றி மறைபோதகம் செய்தார் திருத்தந்தை .



தூய பவுல் முதல் மனிதராக் கூறப்படும் ஆதாம் என்பவருக்கும், இரண்டாவது ஆதாமாக உருவகிக்கப்படும் கிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கூறியுள்ளார். முதல் மனிதன் ஆதாமுடைய குற்றமும் அதனால் வந்த கேடும் பற்றிப் பவுல் போதனை செய்வது , இரண்டாவது ஆதாமாகிய கடவுள் திருமகன் கிறிஸ்துவின் வருகையால் மனுக்குலம் பெற்ற அருளின் பெருக்கம் பற்றி விளக்குவதற்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.



இந்த ஒளியில் பார்க்கும்போது மனிதனின் மீளாத்துயரை நாம் உணர்கிறோம் . அதே சமயம் தூய பவுல் அடிகளார் இந்தப் பெருந்துயருக்கான ஒவ்வொரு ஆண் , பெண் இவர்களின் பொறுப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் . எல்லோரும் பாவம் செய்தோம் . எல்லோரும் கடவுள் கொடுத்த மேன்மைக்குத் தகுதி அற்றவர்களானோம். ஆனால் கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் வழியாக கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம் . புதிய ஆதமாகிய கிறிஸ்து தந்தையின் விருப்பத்துக்குக் கீழ்ப்படிந்து மனுக்குலத்தை பழைய பாவத்தின் சுமையிலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்துள்ளார் . நாம் நம் திருமுழுக்கு வழியாக அவருடைய மீட்பளிக்கும் சாவிலும் உயிர்ப்பிலும் பங்குபெறும் தகுதியைத் தந்துள்ளார் . இதன் வழியாகக் கடவுள் தந்தை அவருடைய குழந்தைகளாக நம்மைத் தத்தெடுத்துள்ளார் . அழிவனைத் தரக்கூடிய அடிமைத்தனத்திலிருந்து படைப்பு அனைத்தும் உறுதியாக விடுதலைபெற்று கடவுளின் குழந்தைகளுக்குரிய மகிமையுள்ள சுதந்திரத்தில் பங்கு பெறும் என்பதற்கு கிறிஸ்துவின் அருளால் நாம் பெற்றுள்ள புதிய வாழ்வும் விடுதலையும் நம்மைச் சான்று பகரத் தூண்டுகின்றது என்று மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .



முடிவில் வந்திருந்த அனைவர்மீதும், சிறப்பாக ஆங்கிலம் பேசும் மால்ட்டா , ஆஸ்திரேலியா, தென் கொரியா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் வந்திருந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்மீதும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை .








All the contents on this site are copyrighted ©.