2008-12-01 16:04:43

இலங்கையின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை பாதையே ஒரேவழி - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


டிச.01,2008. இலங்கையில் தொடர்ந்து இடம் பெற்று வரும் சண்டைக்கு உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை பாதையே நீதியும் நிலைத்ததுமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஒரேவழி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சாவிடம் இன்று கூறினார்.

திருப்பீடத்தில் திருத்தந்தை இன்று ராஜபக்சாவைத் தனியே பதினைந்து நிமிடங்கள் சந்தித்துப் பேசிய போது இவ்வாறு கூறியதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

திருத்தந்தையை சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயையும் அவர் சந்தித்தார். அச்சமயம் திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தொமினிக் மொம்பெர்த்தியும் உடனிருந்தார்.

இச்சந்திப்புகளில் இலங்கையின் தற்போதைய நிலை பற்றிப் பேசப்பட்ட போது அந்நாட்டில் சண்டையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதன் அவசியமும் கோடிட்டு காட்டப்பட்டது.

இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சா, தனது மனைவி ஷிரான்தி ராஜபக்சா, செயலர் லலித் வீரத்துங்கா, வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகிதா போகோலாகாமா ஆகியோர் அடங்கிய குழுவுடன் நேற்று காலை ரோம் வந்தார். இன்றஉ முற்பகல் 11 மணிக்கு 12 பேர் அடங்கிய குழுவுடன் திருத்தந்தையை அவர் சந்தித்தார்.

இத்தாலி மற்றும் துருக்கிக்கான நான்கு நாள் அதிகாரப்பூர்வ இச்சுற்றுப் பயண திட்டத்தில் இலங்கைக்கும் உரோமைக்கும் இடையேயான விமானச் சேவையை மீண்டும் தொடங்கி வைப்பது ஒன்றாக இருந்தது.












All the contents on this site are copyrighted ©.