2008-11-30 20:28:30

திருவருகைக்கால முதல் ஞாயிற்று விழாவுக்கு முந்திய நாள் மாலையில் திருத்தந்தையின் மறையுரை .301108 .


இன்றைய மாலை வழிபாட்டோடு திருவருகைக் கால புதிய வழிபாட்டு ஆண்டை நாம் தொடங்குகிறோம் . திருவருகைக்காலத்தில் நம்பிக்கை ஒளி வீசுகிறது . நம்முடைய வழிபாடுகளும் நம்பிக்கையைத் தெரிவிக்கின்றன . நமமைத் தேடி கடவுள் வரும் நேரம் இது . திருப்பாடல் 141 இல் முதல் 2 வசனங்களில் நாம் இறைவனின் வருகைகக்காக மக்கள் ஏங்குவதைப் பார்க்கிறோம் . – ஆண்டவரே நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன் .விரைவாய் எனக்குத் துணை செய்யும் . உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவி சாய்த்தருளும் .தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக . மாலைப் பலி போல என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக என்கின்றன. இவ்வாறு திருவருகைக் காலத்தின் முதல் மாலை வழிபாடு புதுப் பொலிவுள்ள செபத்தோடு தொடங்குகிறது . மிகப் பெரிய ஆபத்திலிருந்து தன்னைக் காக்குமாறு கதறுவதை முதல் வசனம் காட்டுகிறது . திருச்சபையும் அதைச் சுற்றியுள்ள பல படுகுழிகளிலிருந்து காக்கப்படவேண்டும் . தீமையை எதிர்க்க விரும்பும் நல்லோர் அனைவருடைய குரலையும் நாம் இங்கு கேட்கிறோம் . நீதி மறுக்கப்படுபவர்களுடைய குரலும் , மனித மாண்புக்கு ஒவ்வாத இன்பங்களுக்கு எதிராக , ஏழைகளின் நிலைமைக்கு எதிராக குரல் எழும்புகிறது . திருவருகைக் காலத்தின் தொடக்க வழிபாடு இந்த அபாயக்குரலை எழுப்புகிறது . இது தூபம் போல கடவுள் திருமுன் எழுகிறது . கடவுளிடம் நாம் பொருட்களை அல்ல , நம் ஆன்மாக்களைக் எழுப்புகிறோம் . புதிய உடன்படிக்கையில் குருவும் பலியுமாகிய கிறிஸ்துவோடு இணைந்து நாம் நம் செபங்களை எழுப்புகிறோம் . கிறிஸ்துவின் மறையுடலின் செபம் நம் மனித வாழ்வினையும் அதன் சோதனைகளையும் தம்மேல் சுமந்து வெற்றி கண்ட அதன் தலையாகிய இயேசுவின் வழியாகத் தந்தையாகிய கடவுளுக்குக் காணிக்கையாக்கப்படுகிறது . திருப்பாடல் வரிகள் நம்மைத் தவறான நம்பிக்கைகளிலிருந்து அகற்றி கடவுள்மீது நம் நம்பிக்கையை வைக்கத் தூண்டுகின்றன . நாம் நம் அன்னை மரியாவோடு இணைந்து நமக்காகப் பாடுபட்டு உயிர்த்த இயேசுவினை நோக்கிச் செல்வோம் . நமது கரங்களை அவருடைய கரங்களோடு இணைத்து மகிழ்ச்சியோடு பயணம் செல்வோம் . அன்னை மரியின் மன்றாட்டுக்களோடும் , தூய ஆவியானவரின் அருள் துணையோடும் திருச்சபை மனுக்குலம் அனைத்துக்கும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கட்டும் எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மறையுரை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.