2008-11-29 19:46:53

ஞாயிறு சிந்தனை 29, நவம்பர் ,08 .


ஞாயிறு சிந்தனை 29, நவம்பர் ,08 .

நற்செய்தி – தூய மாற்கு நற்செய்தி 13 , 33- 37 .


இன்று நாம் புதிய வழிபாட்டு ஆண்டினைத் தொடங்குகின்றோம் . இந்தத் திருவருகைக் காலத்தில் கிறிஸ்துவின் வாழ்வு முழுவதும் ,அவரது போதனைகளும் நமக்குத் தரப்படும் . இதற்கு முன்னர் நாம் கிறிஸ்துவின் வாழ்வைத் தெரிந்திருந்தாலும் இதுவே முதற்தடவைபோல நாம் கிறிஸ்துவின் வாழ்வினை ஆர்வமுடன் தெரிந்து கொள்ளவேண்டும் .



வழிபாட்டு ஆண்டில் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழாவுக்காக நம்மையே ஆயத்தப்படுத்தும் திருவருகைக் காலம் இது .



மும்பையில் நடந்த நிகழ்ச்சி நமக்கெல்லாம் பலத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது. தங்கும் விடுதிகளுக்குள்ளே சிக்கிக் கொண்டவர்களின் நிலைமையை ஒரு கணம் சிந்தித்துப்பார்ப்போம் . தப்பிப் பிழைப்போமா , நம்மைக் காப்பாற்ற யாரும் உதவிக்கு வரமாட்டார்களா , என ஏங்கித் தவித்திருப்பார்கள் . இந்தியக் காவலர்கள் அவர்களை 48 மணி நேரத்துக்குப் பிறகும் மீட்பதற்கு முன்னர் நாம் அவர்கள் நிலையில் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்போம் .......சிந்தனை செய்வோம் . நாம் தப்பிப் பிழைக்க வேண்டுமென்றால் அது நிச்சயமாக ஆண்டவன் அருளால்தான் சாத்தியமாகும் . தப்பிப் பிழைத்த சிலர் செத்துப் பிழைத்தவர்கள் . இறக்கும் நிலையில் , கைவிடப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டவர்கள் . தாஜ் விடுதியின் ஜெனரல் மானேஜரும் அவருடைய குடும்பம் முழுவதுமே தீயில் கருகி இறந்ததாகச் செய்திகள் கூறுகின்றன ..... ஒரு யூத குலக் குருவும் அவருடைய மனைவியும் இறந்துள்ளனர் . அப்படியென்றால் தப்பிப் பிழைத்தவர்கள் வாழ்நாளெல்லாம் ஆண்டவனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள் .



இந்த நிகழ்ச்சி போன்றதே திருவருகைக்காலம் என்பதும் . திருவருகைக்காலம் மீட்பர் வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்த கதையை நமக்குக் கூறுகிறது . இஸ்ராயேல் மீட்பரின் வரவை வேகப்படுத்த ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் செபித்துக் கொண்டு காத்திருந்தனர். அவர்கள் நம்பிக்கையெல்லாம் கடவுள் அவர்களைக் காக்க வருவார் என்பதாகும் . திருப்பாடல் 130, வசனம் 5 கூறுகிறது .



ஆண்டவருக்காக நான் காத்திருக்கிறேன் . என் நெஞ்சம் காத்திருக்கின்றது . அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் . விடியலுக்காகக் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய்க் காத்திருக்கின்றது . கடவுள் நம்பிக்கையில் தான் உயிர்வாழ்ந்திருப்பர் .



திருவருகைக் காலம் இஸ்ராயேலரின் எதிர்பார்ப்பை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் காலம் மட்டுமல்ல . இயேசு நம் வாழ்வின் இறுதி நாளில் வருவார் என்பதை நினைவு கூறுகிறோம் . நாம் எதிர்பார்க்காத வேளையில் அவர் வருவார் . அதனால்தான் தூய மாற்கு கூறுகிறார் ....கவனமாயிருங்கள். விழிப்பாயிருங்கள் .ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது .



நாம் இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாவது வருகைக்கும் இடைப்பட்ட முக்கியமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம் . நாம் பக்தியோடு ஆசிரியர் வகுப்பறையைவிட்டு வெளியே சென்று மீண்டும் திரும்பும் வரை வாயில் வகுப்பறையில் ஆட்டம் போடும் மாணாக்கர்களைப் போல வாழ்க்ககையில் விளையாடிக்கொண்டிருக்கக் கூடாது . நமக்கு ஆண்டவர் காட்டும் பணியைச் செவ்வனே முடிக்க வேண்டும் .



திருத்தூதர் மத்தேயு நற்செய்தி அதிகாரம் 28., 19 ஆவது வசனம் இவ்வாறு கூறுகிறது . நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் . தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் , என்று கூறினார்.

திருவருகைக்காலம் நாம் இதனை எவ்வாறு செய்கிறோம் எனச் சோதனை செய்யும் காலமாகும் . உலக முடிவில் இயேசு வரும்போது இறை அரசை நாம் எவ்வாறு அறிவித்தோம் எனத் தீர்ப்பிடுவார் என்பதை நினைவில் கொள்ள திருவருகைக் காலம் நல்லதொரு வாய்ப்பாகும் .



கிறிஸ்து இறந்தார் , கிறிஸ்து உயிர்த்தார் , கிறிஸ்து மீண்டும் வருவார் .அவர் வரும் வரை நாம் நமக்குக் கொடுத்துள்ள பணியைச் செய்தல் வேண்டும் .



பசித்திருப்போர்க்கு உணவு அளிக்க வேண்டும் . தாகமுற்றோரின் தாகத்தைத் தணிக்க வேண்டும் .ஆடையற்றோருக்கு ஆடை அணிவிக்க வேண்டும் .அந்நியரை வரவேற்க வேண்டும் . அமைதியை நிலை நாட்ட உழைக்க வேண்டும் . நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் . இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிலவுலகில் நடமாடிய இயேசு மீண்டும் நாம் நினையாத நேரத்தில் வருவார் .



மும்பை விடுதிகளில் இருந்த காவலர்கள் சரியாகச் சோதனை செய்யாததால் தீய சக்திகள் துப்பாக்கிகளோடும் வெடி குண்டுகளோடும் உள்ளே நுழைந்து நாசவேலையைச் செய்துவிட்டனர் என்பது நாடறிந்த உண்மை . கடல் காவற்படை பணியைச் சரிவரச் செய்யாததால் படகுகளில் வந்து தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர் . விடுதி துப்பறியும் படை சரியாகப் பணி செய்யாததால் அங்கு அரக்கர்களும் பெரிய பெரிய துப்பாக்கிகளோடு வந்து தங்க அனுமதி வழங்கியுள்ளனர் . நல்ல பொழுதைத் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கெட்டார் .

நம் வாழ்வை ரசனையோடும் ஆர்வத்தோடும் வாழ்கிறோமா , குறிக்கோளோடு வாழ்கிறோமா , இறைவன் போட்டுள்ள திட்டத்தை நிறைவேற்றும் வண்ணம் நம் பணியைச் செய்கிறோமா . அந்த இறுதி நாள் திடீரென வரும்போது வாழ்க்கைக் கணக்குச் சரியாக , வரவோடு இருக்குமா .

அவர் மீண்டும் வரும்போது, தனித்தனியாக நம் ஒவ்வொருவரையும் நாம் எவ்வாறு அவர் கொடுத்த பணியைச் செய்துள்ளோம் எனத் தீர்ப்பு வழங்குவார் .



இறைவா நாங்கள் நீவிர் எமக்குக் கொடுத்துள்ள பணிகளை ஆர்வமுடன் செய்வதற்குத் தேவையான அருளையும் ஆற்றலையும் தாரும் .








All the contents on this site are copyrighted ©.