2008-11-29 15:05:06

எய்ட்ஸ் நோய் கடவுளிடமிருந்து பெறப்படும் தண்டனை அல்ல- ஆங்கிலக்கின் பேராயர் நுஜோங்கோ நுதுன்கானே


நவ.29,2008. எய்ட்ஸ் நோய் கடவுளிடமிருந்து பெறப்படும் தண்டனை அல்ல, மாறாக தடுத்து நிறுத்தக் கூடியது மற்றும் அந்நோய்க்கு மருத்துவ உதவிகள் தேவை என்று சமயத் தலைவர்கள் கூரைமீதிருந்து அறிவிக்குமாறு தென்னாப்ரிக்க ஆங்கிலக்கின் சபையின் முன்னாள் தலைவர் பேராயர் நுஜோங்கோ நுதுன்கானே கூறினார்.

டிசம்பர் ஒன்றாந்தேதி உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பேசிய பேராயர் நுஜோங்கோ, இவ்வுலக எய்ட்ஸ் நோய் தினம் அனுசரிக்கப்படத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகும் இவ்வேளையில் இந்நோயாளிகள் மீது தோழமையுணர்வு காட்டப்பட வேண்டும் என்றார்.

எய்ட்ஸ் நோயால் இரண்டு கோடியே ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், தற்சமயம் ஏறத்தாழ மூன்று கோடியே முப்பது இலட்சம் பேர் எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும் ஹைச் சைய்வி கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆண்டு தோறும் இரண்டு இலட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.

எய்ட்ஸ் நோய் குணமாக்க முடியாதது என்றாலும் அதற்கு சிகிச்சை அளிக்க முடியும், இன்னும் இது கடவுளிடமிருந்து பெறப்படும் தண்டனை அல்ல என்ற அவர், இந்நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கச் சமயத் தலைவர்கள் உழைக்குமாறும் வலியுறுத்தினார்.

இன்று உலகில் 15 வயதுக்குட்பட்ட 21 இலட்சம் பேர் ஹைச் சைய்வி கிருமிகளுடன் வாழ்கின்றனர். இந்நோயாளிகளுள் மூன்றில் இரண்டு பகுதி வயது வந்தோருக்கும் 85 விழுக்காட்டுச் சிறாருக்கும் உடனடி சிகிச்சை தேவைப்படுகின்றது என்று உலக கிறிஸ்தவ சபைகளின் லிண்டா ஹார்ட்கே கூறினார்.








All the contents on this site are copyrighted ©.