2008-11-28 17:11:56

மும்பையின் தாக்குதல்களை கண்டிக்கிறார் திருத்தந்தை .28 நவம்பர்,08.


மனித மாண்புக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கூறுகிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . மும்பையின் கர்தினால் ஆஸ்வால்டு கிராஸியாசுக்கு வத்திக்கானின் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே வழியாக அனுப்பிய தந்தி வழிச் செய்தியில் திருத்தந்தை தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் . மும்பையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் செயல்கள் குறித்துத் திருத்தந்தை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார் எனத் தந்திவழிச் செய்தி தெரிவிக்கிறது. இந்த வன்முறையால் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு தமது நெஞ்சார்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறார் .குறிப்பாகப் பாதிக்கப்பட்டோருக்கும் , இந்தியக் குடிமக்களுக்கும் , மும்பை மக்களுக்கும் தமது நெருங்கிய பாச உணர்வை தெரியப்படுத்தியுள்ளார் . கடவுளையும் பிறரையும் அன்பு செய்து நல்லதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்ப மனித குலம் பெற்றிருக்கும் மாபெரும் அழைப்பை முறியடித்து அமைதியைக் குலைக்கும் இப்படிப்பட்ட வன்முறைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை . இந்தத் தாக்குதல்களால் உயிர் இழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி பெறவும் , காயப்பட்டவர்களுக்கும், மன வருத்தத்தில் உள்ளோருக்கும் இறைவனின் கொடையாகிய ஊக்கத்தையும் , ஆறுதலையும் பெற தமது மன்றாட்டுக்களையும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் காணிக்கையாக்கியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.