2008-11-27 15:09:00

நவம்பர் 28 – புனித கத்ரீன் லபோரெ


பாவமின்றி பிறந்த ஓ மரியே, உம்மிடம் செபிக்கும் எங்களுக்காக மன்றாடும் என்ற செபத்தைச் சொல்லி புதுமை மெடலை கழுத்தில் அணிந்து கொள்பவர்களுக்குப் பல புதுமைகள் நடப்பதாகச் சொல்லப்படுகின்றது. இந்த மெடலுக்குச் சொந்தக்காரர் புனித கத்ரீன் லபோரெ. இவர் 1830 ம் ஆண்டில் புனித மரியை பல தடவைகள் காட்சி கண்டவர். ஜோ என்ற இயற்பெயரைக் கொண்ட கத்ரீன், 1806ம் ஆண்டில் பிரான்சில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறந்த கல்வியறிவு பெறவில்லை. எனினும் துறவியாக விரும்பி புனித வின்சென்ட் தெ பவுல் பிறரன்பு கன்னியர் சபையில் சேர்ந்தார். திருநற்கருணையில் இயேசு பிரசன்னமாய் இருப்பதையும் மூவொரு கடவுள் பெருவிழா அன்று கிறிஸ்து, அரசர் போன்று இருந்ததையும் காட்சியில் கண்டவர். பின்னர் அன்னை மரியாவைக் காட்சி கண்ட போது, பாவமின்றி பிறந்த ஓ மரியே, உம்மிடம் செபிக்கும் எங்களுக்காக மன்றாடும் என்ற செபம் மரியைவைச் சுற்றி முட்டை வடிவில் எழுதியிருந்ததையும் கண்டார். இவற்றைப் பொறித்த மெடலை கழுத்தில் நம்பிக்கையுடன் அணிந்தால் நிறைய வரங்களைப் பெறலாம் என்ற குரலையும் கேட்டவர். அக்காட்சியில் அன்னைமரியின் கரங்களிலிருந்து வந்த கதிர்கள் அவளிடம் செபிப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் வரங்கள் என்று அன்னைமரியே விளக்கியிருக்கிறாள். இக்காட்சிகளின் இரகசியங்கள் கத்ரீனின் ஆன்மீகக் குருவுக்கு மட்டுமே தெரியும். கத்ரீன் 1876ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் இறந்தார். திருத்தந்தை 12ம் பத்திநாதர் 1947, ஜூலை 27ம் நாள் கத்ரீனைப் புனிதை என அறிவித்தார். கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள் என்றபுனஇத பவுலின் வார்த்தைகளை இப்புனிதையும் சொல்வார்.

சிந்தனைக்கு – உன் செயல்களுக்குத் தகுந்த பலனை இறைவன் கொடுப்பார்.

 








All the contents on this site are copyrighted ©.