2008-11-25 15:00:24

கிறிஸ்தவர்கள் குடியேற்றதாரர் மீது தோழமை கலாச்சாரத்தைக் காட்ட வேண்டும் – வத்திக்கான்


நவ.25,2008. இருபது கோடிக்கு மேற்பட்ட குடியேற்றதாரரும் அகதிகளும் வாழும் இவ்வுலகில், அம்மக்களுக்கான பொருளாதார-ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றும், குறிப்பாக அவர்களின் மாண்பை மதிக்கும் தோழமை கலாச்சாரத்திற்கு திருப்பீட குடியேற்றதாரர் அவைச் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ அழைப்புவிடுத்துள்ளார்

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும் ஆப்ரிக்க-மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும் இணைந்து இங்கிலாந்தின் லிவர்பூலில், குடியேற்றதாரர், அகதிகள், வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோர்க்கான மேய்ப்புப்பணி என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் பேசிய பேராயர் மர்க்கெத்தோ, தோழமை கலாச்சாரத்தை வலியுறுத்தினார்.

அகதிகளில் பிரசன்னமாய் இருக்கும் கிறிஸ்துவோடு நடப்பதும் அவரை நோக்கி வாழ்வதும் அவசியம் என்று இஞ்ஞாயிறன்று நிறைவு பெற்ற இக்கூட்டத்தில் உரைத்த அவர், திருச்சபையில் யாரும் அந்நியரல்ல, அது எல்லா நாட்டினரையும் இனத்தவரையும் மொழியினரையும் அரவணைக்கின்றது என்றார்.

உலகிலுள்ள குடியேறிகளில் ஏறத்தாழ 25 விழுக்காட்டினர் ஆசியாவில் இருக்கின்றனர். இங்குள்ள குடியேறிகளால் அந்நாடுகளுக்கு ஆண்டுதோறும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 40 கோடி டாலர் அனுப்பப்படுகிறது. இது உலக அளவில் அனுப்பப்படும் பணத்தில் ஏறத்தாழ 30விழுக்காடாகும்.








All the contents on this site are copyrighted ©.