2008-11-25 15:04:50

ஒரிசாவில் கற்பழிக்கப்பட்ட அருட்சகோதரிக்கு நீதி கிடைக்க பெண்கள் அமைப்பு வற்புறுத்தல்


நவ.25,2008. ஒரிசாவில் இடம் பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையைக் கண்டித்து கத்தோலிக்க கன்னியர், மாணவ மாணவியர், எழுத்தாளர், நடிகர்கள் உட்பட இரண்டாயிரத்துக்கு அதிகமானோர் சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று மழையிலும் ஊர்வலம் நடத்தினர்.

சமய சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான பெண்களின் முயற்சி என்ற அமைப்பின் கீழ் 20 பெண்கள் அமைப்புகள் ஏற்பாடு செய்த இந்தப் பேரணியில் ஒரிசாவில் இந்து தீவிரவாதிகளால் கற்பழிக்கப்பட்ட கத்தோலிக்க அருட்சகோதரி விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை இடம் பெறுமாறு வலியுறுத்தப்பட்டது.

இப்பேரணி தொடங்கு முன்னர் பேசிய சென்னை மயிலைப் பேராயர் மலயப்பன் சின்னப்பா, நாட்டை அழிக்கும் இத்தகைய வன்முறை மற்றும் வெறுப்பு குறித்து விழிப்போடு இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கிறிஸ்தவர்களைத் தாக்கி சமூகங்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் இந்து தீவிரவாத அமைப்பைத் தடை செய்ய வேண்டும், ஒரிசாவில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் சிறாரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இப்பேரணியினர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்தியாவில் சகிப்பற்றதன்மையும் வெறுப்பும் வளர்ந்து வரும்வேளை, சமூக நல்லிணக்கத்தையும் சமய சார்பற்ற நிலையையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் நவமபர் ஒன்றாந் தேதி WISI என்ற சமய சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான பெண்களின் முயற்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.